செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
cd5746ed-3716-4e33-84fa-82ab5a878e7d
-

கடந்த 76 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் கடும் வெப்பநிலை பதிவு

புதுடெல்லி: கடும் குளிரால் அவதிப்பட்டு வந்த வட மாநில மக்கள் அடுத்து கடும் வெயிலை எதிர்கொண்டுள்ளனர். பிப்ர வரி இறுதிவரை டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வந்தது. இந்நிலை யில், ஏப்ரல் மாதத்துக்கும் முன்பே வட இந்தியாவில் வெயில் கொளுத்தி வருகிறது. நேற்று முன்தினம் டெல்லியில் 40.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. கடந்த 1945ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி டெல்லியில் 104.7 டிகிரி வெயில் பதிவானது. அதன்பிறகு கடந்த 76 ஆண்டுகளில் இப்போதுதான் மிக அதிக வெயில் பதிவாகி உள்ளது.

பெண்ணை மானபங்கம் செய்தவர் சமூகப்பணியில் ஈடுபட உத்தரவு

புதுடெல்லி: வணிக வளாகத்தில் அமர்ந்திருந்த இளம் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து மானபங்கப் படுத்திய ஆடவருக்கு ஒரு மாதம் சமூகப்பணி செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த இளம் பெண் கடந்த ஆண்டு ஜூலை 15ஆம் தேதி வணிக வளாகத்துக்குச் சென்றிருந்தபோது சம்பந்தப்பட்ட அந்த ஆடவர் தாம் ஒரு கோடீஸ்வரர் என்று கூறிக்கொண்டு அப்பெண்ணை அணுகியுள்ளார். விலகிச் செல்லுமாறு அந்தப் பெண் கூறியபோது அவரது கையைப் பிடித்து இழுத்து அந்த ஆடவர் முறுக்கியதாகத் தெரிகிறது. இது தொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், அந்த ஆடவர் போதை மருந்து புனர்வாழ்வு மையத்தில் ஒரு மாதம் சமூகப்பணியில் ஈடுபட வேண்டும் என்று உத்தரவிட்டு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.

'ஓசிஐ' அட்டை இருந்தால் பழைய கடப்பிதழ் தேவை இல்லை

புதுடெல்லி: 'ஓசிஐ' (OCI) அட்டை வைத்துள்ள இந்திய வம்சாவளியினர் இனி இந்தியப் பயணத்தின்போது பழைய, காலாவதியான கடப்பிதழ்களை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்திய வம்சாவளியினர் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. 'ஓசிஐ' (OCI) அட்டை என்பது வெளி நாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு வழங்கப்படுகிறது. வாக்குரிமை, அரசுப்பணி ஆகியவற்றைத் தவிர இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் உரிமைகளும் இந்த அட்டையை வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த அட்டையில் பழைய கடப்பிதழ் எண்கள் இடம்பெற்றிருக்கும் என்பதால் அதன் உரிமையாளர் இந்தியாவுக்கான பயணத்தின்போது அப்பழைய கடப்பிதழை உடன் எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை என அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத ஊர்வலத்துக்குத் தடை: போலிசார் மீது கடும் தாக்குதல்

மும்பை: மத ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டதால் மகாராஷ்டிராவில் போலிசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அங்குள்ள நாந்தேத் என்ற பகுதியில் உள்ள குருத்வாரா சார்பில் ஊர்வலம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு அனுமதி மறுத்த போலிசார் குருத்வாரா அருகே தடுப்பரண்களையும் அமைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 400க்கும் மேற்பட்டவர்கள் தாங்கள் வைத்திருந்த வாள், கம்புகள் ஆகியவற்றைக் கொண்டு தாக்கியதில் நான்கு போலிசார் படுகாயம் அடைந்தனர்.

விமானக் கட்டணம் அதிகரிப்பு

புதுடெல்லி: ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வான் பாதுகாப்புக் கட்டணம் உயர்த்தப்படுவதாக விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் உள்நாட்டுப் பயணிகள் 40 ரூபாயும் வெளிநாடு செல்லும் பயணிகள் 114.38 ரூபாயும் கூடுதலாகச் செலுத்த வேண்டியிருக்கும். குழந்தைகள் உள்ளிட்ட சில தரப்பினருக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.