வாந்தி எடுக்க பேருந்து சன்னலுக்கு வெளியே தலையை நீட்டிய சிறுமியின் தலை துண்டானது

வாந்தி எடுக்க பேருந்து சன்னலுக்கு வெளியே தலையை நீட்டிய சிறுமியின் தலை துண்டானது

1 mins read

பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது வாந்தி எடுப்பதற்காக தலையை வெளியே நீட்டிய சிறுமியின் மீது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியதில் அச்சிறுமியின் தலை துண்டானது. இச்சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தின் கந்த்வா மாவட்டத்தில் நிகழ்ந்தது.

தமன்னா என்ற அந்த 13 வயதுச் சிறுமி தம் தாயாருடனும் சகோதரியுடனும் கந்த்வாவில் இருந்து இந்தூருக்குப் பேருந்தில் சென்றுகொண்டிருந்தாள். பேருந்து ஓட்டுநருக்குப் பின்னே அவர்கள் அமர்ந்திருந்தனர்.

பயணத்தின்போது தமன்னாவிற்கு வாந்தி வருவதுபோல் இருந்ததால் திடீரென பேருந்துச் சன்னலுக்கு வெளியே தலையை நீட்டினாள். அவ்வேளையில், எதிர்த்திசையில் விரைந்து வந்த சரக்கு வாகனம் அவள் மீது மோதியதில் அவளது தலை துண்டானது.

"என்ன நடந்ததென்றே புரியவில்லை. திடீரென, எங்கள் அனைவர் மீதும் பேருந்திலும் ரத்தம் தெறித்தது. சில நொடிகளுக்குப் பின், அச்சிறுமியின் தாயார் அதிர்ச்சியில் அலறினார். மிகவும் பயங்கரமாக இருந்தது," என்று அப்பேருந்துப் பயணிகளில் ஒருவர் விவரித்தார்.

உறவினரின் திருமணத்திற்குச் சென்றபோது தமன்னா இப்படி விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டதாக போலிஸ் கூறியது. தமன்னாவை அதிகாரியாக்க அவளின் தந்தை விரும்பியதாகவும் அதற்காக அவளை அங்குள்ள நல்லதொரு பள்ளிக்கு அனுப்பிப் படிக்க வைத்ததாகவும் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்