படுமோசமான நிலைக்குச் சென்ற கொவிட்-19 தொற்று
புதுடெல்லி: இந்தியாவில் கொவிட்-19 பரவல் மோசமான நிலையில் இருந்து படுமோசமான நிலைக்குச் சென்றுவிட்டதாக அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.
இதையடுத்து, கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் அடுத்த இரு வாரங்களுக்குள் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவர்க்கும் தடுப்பூசி போடுவதை உறுதிசெய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 53,480 பேரை கொரோனா தொற்றிவிட்டதாகவும் அதன் காரணமாக மேலும் 354 பேர் இறந்துவிட்டதாகவும் நேற்றுக் காலை 8 மணிக்குச் சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர், அதாவது சராசரியாக நாளொன்றுக்கு 58,000 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு விட்டனர்.
"சில மாவட்டங்களில் நிலைமை படுமோசமாக உள்ளது. ஆனாலும், நாடு முழுவதும் ஆபத்தான சூழல் இருக்கிறது. கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தவும் உயிர்களைக் காக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்," என்று நிதி ஆயோக் உறுப்பினரும் தேசிய கொவிட்-19 பணிக்குழுவின் தலைவருமான வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
பல மாநிலங்களிலும் கொரோனா தொற்று ஏறுமுகத்தில் இருப்பதை அடுத்து பரிசோதனை முடுக்கிவிடப்பட்டுள்ளது. கடந்த மாதத்தின் முற்பாதியைக் காட்டிலும் பிற்பாதியில் 38% அதிகமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, வெளிமாநிலங்களில் இருந்து டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்குவோரில் அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சிலருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சோதனையில் தொற்று உறுதியானால் அவர்கள் கட்டாயமாகத் தனிமைப்படுத்தப்படுவர் என்று டெல்லி அரசு கூறியிருக்கிறது. அடுத்ததாக இந்நடவடிக்கையை ரயில், பேருந்து நிலையங்களிலும் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு மற்றும் பரவல் வேகத்தின் அடிப்படையில் மாவட்டவாரியாகத் திட்டம் வகுத்து, நடைமுறைப்படுத்தும்படி மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் மூலம் அறிவுறுத்தி இருக்கிறார்.
'முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படாது'
இதனிடையே, மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மனைவி ராஷ்மிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்தம்பதியரின் மகனும் மாநில அமைச்சருமான ஆதித்ய தாக்கரேவும் முன்னர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ஆறு நாள்களுக்கு மேலாக அங்கு 30,000 பேருக்கு மேல் கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அங்கு அப்பாதிப்பு 30,000க்குக் கீழ் பதிவானது. இந்நிலையில், அங்கு இன்னொரு முறை முழுமையான ஊரடங்கு அறிவிக்கப்படாது என்றும் அதே வேளையில் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என்றும் மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.

