சோனியா, மு.க.ஸ்டாலின் உட்பட 15 தலைவர்களுக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்து
கோல்கத்தா: ஜனநாயகத்தின் மீதும் நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சித் தத்துவத்தின் மீதும் பாஜக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.
இத்தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ள பாஜக ஆளாத மாநிலங்களில் இருக்கும் தலைவர்கள் ஒன்றுசேர வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
தமது இந்த கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 15 தலைவர்களுக்கு முதல்வர் மம்தா கடிதம் எழுதியுள்ளார்.
சரத் பவார், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், மாநில முதல்வர்கள் உத்தவ் தாக்கரே, கெஜ்ரிவால், சிபுசோரன், நவீன் பட்நாயக், ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோருக்கு அனுப்பிய கடிதத்தில், தமது கவலைகளைத் தெரிவிக்கும் விதமாக எழுதியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ள நிலையில், மம்தா எழுதியுள்ள கடிதம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
"தங்களுடைய சொந்த இலக்குகளுக்காக மத்தியில் ஆளும் பாஜக அரசு, விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கப் பிரிவு, தேசிய புலனாய்வு முகமை ஆகியவற்றின் மூலம், பாஜக அல்லாத தலைவர்களுக்கும் பல்வேறு அமைப்புகளுக்கும் எதிராகச் செயல்பட வைக்கிறார்கள்.
"குறிப்பாகத் தமிழகம், மேற்கு வங்கத்தில் தேர்தல் நடக்கும் நிலையில் இரு கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் வீடுகளில் அமலாக்கப் பிரிவு மூலம் சோதனையிட வைக்கிறது. இந்த சோதனை பாஜக அல்லாத தலைவர்களின் வீடுகளில்தான் நடந்துள்ளது," என மம்தா பானர்ஜி மேலும் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு திட்டமிட்டே, பாஜக ஆட்சி அல்லாத மாநிலங்களுக்குச் சேர வேண்டிய நிதியை நிறுத்தி வைப்பதாகக் குற்றம்சாட்டி உள்ள அவர், இதனால், மக்கள் நலனுக்குத் தேவையான நலத்திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் சிக்கலை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
"தேசிய மேம்பாட்டுக் கவுன்சில், மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில், திட்டக்குழு ஆகியவற்றை மோடி அரசு கலைத்துவிட்டு அதிகாரமில்லாத நிதி ஆயோக் அமைப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
"மாநில அரசுகள் தங்கள் குறைகள், தேவைகள், கவலைகள் அனைத்தையும் தெரிவித்து வந்த துறைகள் அனைத்தையும் மோடி அரசு செயல்படாமல் வைத்துவிட்டது," என மம்தா கூறியுள்ளார்.
மொத்தத்தில் மத்திய, மாநில அரசுகளின் உறவுகள், மாநிலத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, மத்திய அரசு ஆகியவற்றின் உறவுகள் வரலாற்றில் இதைவிட மோசமாகச் சென்றதில்லை என்றும் இவை அனைத்துக்கும் பிரதமர் மோடியின் சர்வாதிகாரப் போக்குதான் காரணம் என்றும் முதல்வர் மம்தா சாடி உள்ளார்.

