புதுடெல்லி: மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர்களின் தியாகத்துக்கு தலைவணங்குவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மாவோயிஸ்டுகளுக்கு சரியான நேரத்தில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.
நேற்று மோதல் நிகழ்ந்த பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அமித் ஷா, மாவோயிஸ்டுகளின் ஆதிக்கத்தை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.
நேற்று முன்தினம் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிஜாபூர்-சுக்மா எல்லைப் பகுதியில் மாவோயிஸ்டுகள் அதிகளவில் முகாமிட்டிருப்பது குறித்து கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்புப் படையினர் அங்கு அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
1,500க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், மாவோயிஸ்டுகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையின் முடிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 22 பேர் உயிரிழந்துவிட்டனர்.
இந்நிலையில் மாவோயிஸ்டுகள் தரப்பிலும் 20 பேருக்கு மேல் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது.
தாக்குதல் நடத்த பகுதியில் இருந்து பெண் மாவோயிஸ்ட் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. மற்ற சடலங்களை மாவோயிஸ்டுகள் சில வாகனங்களில் கொண்டு செல்வது ஆளில்லா விமானம் மூலம் எடுக்கப்பட்ட படங்களின் வழி தெரிய வந்துள்ளதாக ஊடகச் செய்தி ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவோயிஸ்டுகள் தாக்குதலில் 13 பாதுகாப்புப் படை வீரர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித் ஷா, நடந்த சம்பவம் குறித்து அவர்களிடம் விரிவாக கேட்டறிந்தார்.
பின்னர் மோதல் நிகழ்ந்த பகுதிக்குச் சென்று உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்ட அவர், மாவோயிஸ்டுகளுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
"உயிரிழந்துவிட்ட வீரர்களின் வீரத்தை தேசம் ஒருபோதும் மறக்காது. அமைதி, முன்னேற்றத்துக்கு எதிரான நமது போராட்டம் தொடரும். இதுபோன்ற தாக்குதலை சகித்துக்கொள்ள இயலாது," என அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

