திருவனந்தபுரம்: மத்திய அரசு வழங்கும் உதவித்தொகை ஏழை எளிய மக்களின் கைகளைச் சென்றடைய வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் விருப்பம் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கேரளாவில் உள்ள அனைத்து ஏழை மக்களுக்கும் மாதந்தோறும் 6,000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும் என தேர்தல் பிரசாரத்தின்போது அவர் வாக்குறுதி அளித்தார்.
தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் இன்று ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இறுதிக்கட்டப் பிரசாரத்தின்போது அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வாரி வழங்கினர். வெள்ளமுண்டா என்ற பகுதியில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஏழைகளுக்கு உதவித்தொகை வழங்குவது குறித்து ராகுல் குறிப்பிட்டார்.
"நாட்டின் எந்த மாநிலத்திலும் இதுவரை நடந்திராத ஒன்றை கேரளாவில் புரட்சிகரமாக நடத்திக்காட்ட காங்கிரஸ் கூட்டணி விரும்புகிறது. அந்த வகையில் கேரளாவில் ஏழை எளிய மக்களுடைய கைகளுக்கு அரசுப்பணம் போய்ச்சேர வேண்டும் என்று நினைக்கிறோம்.
"கேரளாவில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு ஏழையும் மாதம் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் பெறுவார்கள். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் கிடைக்கும். ஒருமாதம் கூட தவறாமல் அவர்களின் வங்கிக் கணக்கில் இந்த தொகை செலுத்தப்பட்டுவிடும்," என்றார் ராகுல்.
இத்திட்டம் கேரளாவில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால் பின்னர் காங்கிரஸ் ஆளும் மற்ற மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ராகுல் விரும்புவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.