கோடீஸ்வரர்கள்: அம்பானி முதலிடம்
மும்பை: இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் பட்டியலில் ரிலையன்ஸ் குழும அதிபர் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 8,450 கோடி அமெரிக்க டாலர் என 'ஃபோர்ப்ஸ்' இதழ் தெரிவித்துள்ளது. ஆசிய அளவிலும் முதலிடம் வகிக்கும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு கொரோனா ஊரடங்கின் போதும் 3,500 கோடி அமெரிக்க டாலர் அதிகரித்துள்ளது. இந்திய பணக்காரர்கள் பட்டியலில் கவுதம் அதானி இரண்டாம் இடத்தில் உள்ளார். இந்திய அளவில் ஷிவ் நாடார், ராதாகிஷன் தாமணி, உதய் கோடக் உள்ளிட்டோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
புது இந்தியா: துணை அதிபர் நம்பிக்கை
புதுடெல்லி: எதிர்வரும் 2047ஆம் ஆண்டில் நாட்டின் நூறாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது புதிய இந்தியா உருவாகி இருக்கும் என துணை அதிபர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். அடுத்த 25 ஆண்டுகளுக்குள் இந்தியா அபரிமிதமான வளர்ச்சி காணும் என்றும் அவர் கூறியுள்ளார். நாட்டின் வளர்ச்சிக்காக அனைத்துத் தரப்பு மக்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என வலியுறுத்திய துணை அதிபர் வெங்கையா நாயுடு, தேசத்தந்தை மகாத்மா காந்தி, நாட்டின் முதல் துணைப் பிரதமர் சர்தார் வல்லபாய் படேல் உள்ளிட்டோர் மக்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்துள்ளனர் என்றார்.
நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்
புதுடெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 134வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன. நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க விவசாயிகளின் போராட்டமும் ஒரு காரணம் என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மனம் தளராமல் தொடர்ந்து டெல்லியின் பல எல்லைகளில் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் வீரர்களுக்கு கொரோனா
மும்பை: மும்பை, டெல்லி உள்ளிட்ட ஐபிஎல் அணிகளைச் சேர்ந்த சில வீரர்களுக்கு கொரோனா கிருமித்தொற்றுப் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. மும்பை இண்டியன்ஸ் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான கிரண் மோரேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னதாக டெல்லி அணியின் அக்ஸார் பட்டேல், ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் படிக்கல் ஆகியோருக்கு கொரோனோ தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்தாண்டு ஐபிஎல் தொடருக்கான முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் மைதான ஊழியர்கள் மூன்று பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனினும் திட்டமிட்டபடி மும்பையில் போட்டிகள் நடக்கும் என ஐபிஎல் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியா, சீனா இடையே நாளை அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை
புதுடெல்லி: இந்தியா, சீனா இடையே எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காண அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை நாளை நடை பெறுகிறது. இரு நாடுகளின் ராணுவ மட்டத்திலான இந்தப் பேச்சுவார்த்தையின் ஒன்பதாவது சுற்றின்போது, கிழக்கு லடாக் பகுதியில் கடந்த 2020, ஏப்ரல் மாதத்துக்கு முன்பிருந்த சூழலைக் கொண்டு வருவது குறித்துப் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தும் ஆர்வம் தென்படுவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாவோயிஸ்ட்: பாதுகாப்புப் படை வீரர்களைத் தாக்குவது நோக்கமல்ல
ஜெய்ப்பூர்: பாதுகாப்புப் படை வீரர்களுக்கு எதிராக போராட்டமும் தாக்குதலும் நடத்துவது தங்கள் நோக்கமல்ல என மாவோயிஸ்டுகள் தெரிவித்துள்ளனர். மேலும் தங்களிடம் பிடிபட்ட பாதுகாப்புப் படை வீரரை விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் அவர்கள் முன்வந்துள்ளனர். மாவோயிஸ்டுகளின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், அரசாங்கத்துக்கு எதிராக மட்டுமே அந்த அமைப்பு போராடி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. "நக்சல்களைப் பழிவாங்கப்போவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார். யாரிடம் இருந்து இந்த பழிவாங்கும் படலத்தை அவர் தொடங்கப் போகிறார்? நக்சல்களிடம் இருந்தா அல்லது ஒடுக்கப்பட்ட மக்களிடம் இருந்தா?" என்று அந்த அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
பதினாறு கைதிகள் தப்பியோட்டம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் மாவட்ட சிறையில் இருந்து 16 தண்டனைக் கைதிகள் தப்பியுள்ளனர். சிறையில் உள்ள சமையல் கூடத்தில் இருந்து மிளகாய்ப்பொடியை எடுத்து வந்து அக்கைதிகள் சிறைக்காவலர்கள் மீது வீசியுள்ளனர். பின்னர் அவர்களிடம் இருந்து சாவிகளைப் பறித்த கைதிகள் 16 பேர் சிறைக்கதவைத் திறந்து தப்பியுள்ளனர். இது குறித்து விசாரணை நடக்கிறது.

