புதுடெல்லி: கொரோனா விவகாரத்துக்கு மத்தியில் இந்தியாவின் பொருளியல் வளர்ச்சியானது நடப்பாண்டில் 12.5 விழுக்காடாக இருக்கும் என அனைத்துலக பண நிதியம் (ஐஎம்எஃப்) கணித்துள்ளது.
இந்த வளர்ச்சி விகிதமானது வளர்ந்த, வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் வளர்ச்சி விகிதத்தைவிட அதிகமாகும்.
கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக கிட்டத்தட்ட அனைத்து உலக நாடுகளும் கடும் பொருளியல் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன. பாதிப்பு குறைந்துவரும் நாடுகளில் இப்போதுதான் பொருளியல் நடவடிக்கைகள் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளன.
இந்தியாவில் கொரோனா முதல் அலைக்குப் பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனால் பொருளியல் நடவடிக்கைகள் வேகமடைந்தன.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் பல்வேறு நாடுகளின் பொருளியல் நிலவரம் குறித்து அனைத்துலக பண நிதியம் தனது கணிப்புகளை வெளியிட்டது. அதன்படி, 2021-22ஆம் நிதியாண்டில் இந்தியா 11.5 விழுக்காடு அளவிற்கு பொருளாதார வளர்ச்சி காணும் என்று அந்நிதியம் தெரிவித்தது.
இந்நிலையில் அண்மைய கணிப்பின்போது இந்தியாவின் வளர்ச்சி விகிதமானது 12.5 விழுக்காடாக அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் இரண்டு மாத காலத்துக்குள் ஒரு விழுக்காடு கூடுதல் வளர்ச்சியை இந்தியா அடையும் என ஐஎம்எஃப் கணித்துள்ளது.
இதே போல் 2022-23ஆம் ஆண்டிலும் இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரிக்கலாம் எனவும் அந்நிதியம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய மூன்று நாடுகளும் உலக பொருளாதார வளர்ச்சிக்கான உந்துசக்தியாக உள்ளன என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

