மும்பை: மகாராஷ்டிராவில் எந்த நேரத்திலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக அம்மாநிலத்தில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் வேகமாக வெளியேறி வருகின்றனர்.
அம்மாநிலத்தில் கொரோனா தடுப்பூசிப் பற்றாக்குறை அதிகரித்துள்ளதும் தொழிலாளர்களின் அச்சத்திற்கு காரணமாகி உள்ளது.
அதிக பாதிப்புள்ள மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. தினந்தோறும் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவதை அடுத்து அங்கு வார இறுதி நாள்களில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
எனினும் பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் மிக விரைவில் அங்கு வார நாள்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அச்சம் காரணமாக மகாராஷ்டிராவில் இருந்து வெளிமாநிலத் தொழிலாளர்கள் வேகமாக வெளியேறி வருகின்றனர். கடந்த ஆண்டு ஊரடங்கின்போது புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகமுள்ள மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்ப முடியாமல் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தவிப்புக்கு ஆளாகினர்.
பலர் சில நூறு கிலோ மீட்டர் தூரத்தை நடந்தே கடந்து சொந்த ஊர் திரும்பியதாக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் இடம்பெற்றன.
இந்நிலையில் மீண்டும் அதே போன்ற சிக்கலுக்கு ஆட்படக்கூடாது என்பதால் முன்கூட்டியே மகாராஷ்டிராவை விட்டு வெளிமாநிலத் தொழிலாளர்கள் வெளியேற முடிவு செய்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக மகாராஷ்டிராவில் இருந்து வெளிமாநிலங்களை நோக்கிச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கார், வேன்கள், டிராக்டர்கள், ஆட்டோக்களில் தொழிலாளர்கள் பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசிகளுக்கு மகாராஷ்டிராவில் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் தடுப்பூசி போடும் மையங்கள் பல மூடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மும்பையில் உள்ள 71 தனியார் மையங்களில் 25 மையங்கள் மூடப்பட்டன. அனைத்து மாநிலங்களிலும் அடுத்த ஐந்து நாள்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக இந்திய நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
எனவே தங்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வாய்ப்பில்லை என்பது தெரிய வந்திருப்பதும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாகத் தெரிகிறது.
முழு ஊரடங்குக்கு வாய்ப்பு; தடுப்பூசி பற்றாக்குறையால் ஆயிரக்கணக்கானோர் அச்சம்

