புதுடெல்லி: எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா, சீனா இடையே அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நடைபெற்றது.
அப்போது கிழக்கு லடாக் பகுதியில் இருந்து இருதரப்பும் படைகளை முழுவதுமாக திரும்பப்பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக ஊடகத் தகவல் தெரிவிக்கின்றன.
கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் சீன ராணுவம் எல்லைப் பகுதியில் அத்துமீற முயன்றதாகவும் படைகளைக் குவிப்பதாகவும் இந்தியா தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இதை சீனா திட்டவட்டமாக மறுத்த நிலையில் மே மாதம் இருதரப்புக்கும் இடையே நடந்த மோதல் காரணமாக எல்லையில் பதற்றம் நிலவியது. இதையடுத்து இரு நாடுகளும் அமைதி ஏற்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து ஆலோசிக்க முன்வந்தன.
இதுவரை இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பத்து முறை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் நேற்று முன்தினம் 11வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தது.
அப்போது பங்கோங் சோ ஏரிப் பகுதியில் இருந்து சீனா படைகளை விலக்கிக்கொண்டதை வரவேற்ற இந்திய தரப்பு அதேபோல் பிற பகுதிகளில் இருந்தும் படைகளைத் திரும்பப்பெற வலியுறுத்தியது.
குறிப்பாக ஹாட்ஸ்பிரிங்ஸ், கோக்ரா, தேப்சாங் சமவெளி உள்ளிட்ட சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து சீனா தனது படைகளை முற்றிலுமாக திரும்பப்பெற வேண்டும் என இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் காலை 10.30 மணியளவில் தொடங்கிய பேச்சுவார்த்தை 11 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.
அப்போது இந்தியாவின் எதிர்பார்ப்பு குறித்து சீன தரப்புக்கு திட்டவட்டாக எடுத்துரைக்கப்பட்டது என்றும் எல்லைப் பகுதிகளில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு முன்பிருந்த சூழலை ஏற்படுத்த வேண்டும் என்றும் இந்தியை வலியுறுத்தியதாக தெரிகிறது.
பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

