ராய்ப்பூர்: தங்களிடம் சிக்கிய மத்திய ரிசர்வ் போலிஸ் படையின் அதிரடிப் பிரிவைச் சேர்ந்த வீரரை எந்த வகையிலும் துன்புறுத்தவில்லை என மாவோயிஸ்டுகள் தெரிவித்துள்ளனர்.
சத்தீஸ்கரில் அண்மையில் பாதுகாப்புப் படையினருடன் மோதியபோது ராகேஷ்வர் சிங் என்ற வீரரை மயக்க நிலையில் தாங்கள் சிறைப்பிடித்ததாக அவர்கள் குறிப்பிட்டனர். தாங்கள் பின்பற்றும் நன்னெறிகளின் அடிப்படையில் அந்த வீரரை தாக்கவில்லை என்று ராகேஷ்வர் சிங்கை மீட்க வந்த குழுவினரிடம் அவரை ஒப்படைத்தபோது மாவோயிஸ்டுகள் தெரிவித்தனர்.
வீரர் ராகேஷ்வர் சிங்கை மீட்க அமைக்கப்பட்ட குழுவில் சமூக ஆர்வலர்களான 91 வயது தரம்பால் சைனி, தெல்லம் போரையா தவிர ஏழு ஊடகவியலாளர்களும் இடம்பெற்றிருந்தனர்.
"எங்களை ஒரு வனப்பகுதி கிராமத்துக்கு வருமாறு மாவோயிஸ்டுகள் கூறினர். இரு சக்கர வாகனங்களில் நான்கு மணிநேரம் பயணம் செய்து அங்கு சென்றோம்.
"சுமார் ஐந்து மணி நேர காத்திருப்புக்குப் பின்னர் அதிரடிப் பிரிவு வீரரை 70க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் அழைத்து வந்தனர். ராகேஷ்வர் சிங்கின் கைகள் கட்டப்பட்டிருந்தாலும் அவரை அடித்து துன்புறுத்தவில்லை என்று கூறினர்," என்கிறார் மீட்புக்குழுவில் இடம்பெற்றிருந்த செய்தியாளர் மிஷ்ரா.
மனிதாபிமான அடிப்படையில் எந்தவித நிபந்தனையும் இன்றி மாவோயிஸ்டுகள் ராகேஷ்வர் சிங்கை விடுவித்ததாக குறிப்பிட்ட அவர், நீர்ப்போக்கால் பாதிக்கப்பட்ட வீரருக்கு மாவோயிஸ்டுகள் சிகிச்சை அளித்ததாகவும் தெரிவித்தார். இதற்கிடையே தமது மகனின் வரவு தீபாவளிப் பண்டிகை போன்ற உணர்வை ஏற்படுத்தி உள்ளதாக ராகேஷ்வர் சிங்கின் தாயார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

