புதுடெல்லி: இந்திய கடற்பகுதிக்குள் முன் அனுமதியின்றி நுழைந்து அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று ராணுவப் பயிற்சி மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த அத்துமீறிய செயலுக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் எந்தவித அத்துமீறலும் நடக்கவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் 'யுஎஸ்எஸ் ஜான்பால் ஜோன்ஸ்' என்ற போர்க்கப்பல் கடந்த 7ஆம் தேதி இந்தியாவின் பொருளாதார மண்டலப் பகுதிக்குள் நுழைந்ததுடன் ராணுவப் பயிற்சியும் மேற்கொண்டது.
இந்திய கடலோர வட்டாரங்களுக்கான கொள்கைப்படி, வெளிநாட்டு ராணுவக் கப்பல்கள், பொருளாதார மண்டலத்திற்குள் நுழைய அனுமதி கிடையாது.
அமெரிக்கப் போர்க்கப்பல் இதை மீறியுள்ளது. எனினும் அனைத்துலகச் சட்டங்களுக்கு உட்பட்டே போர்க்கப்பல் பயிற்சியில் ஈடுபட்டதாகவும் இதற்கு முன்அனுமதி பெற வேண்டியதில்லை என்றும் அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் குற்றச்சாட்டு அனைத்துலகச் சட்டங்களுக்கு விரோதமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ள அமெரிக்கா, எதிர்காலத்திலும் இத்தகைய பயிற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் இதில் எந்தவித அரசியலும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.