குழந்தைத் திருமணங்களைத் தடுக்க
நூதன உத்தரவு பிறப்பித்த ராஜஸ்தான்
ஜெய்ப்பூர்: குழந்தை திருமணங்களை தடுக்க ராஜஸ்தான் மாநில அரசு நூதன உத்தரவு பிறப்பித்துள்ளது. இனி அங்கு நடைபெற உள்ள திருமணங்களுக்கான அழைப்பிதழ்களில் மணமக்களின் வயதை கட்டாயம் அச்சிட வேண்டும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வயதுக்குரிய ஆதார மாக மணமக்களின் பிறப்புச் சான்றிதழை, அழைப்பிதழ் அச்சடிக்கும் அச்சக உரிமையாளரிடம் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தைத் திருமணங்களில் மேளம் வாசிப்போர், உணவு ஏற்பாடு செய்வோர், பந்தல் அமைப்போர் என அனைவர் மீதும் நடவடிக்கை பாயும் எனவும் மாநில அரசு எச்சரித்துள்ளது.
முதல்வரிடம் மனு அளித்து உதவி கோரிய ஆசியாவின் உயரமான மனிதர்
லக்னோ: ஆசியாவின் மிக உயரமான மனிதராக கருதப்படுபவர் தர்மேந்திர பிரதாப் சிங். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் 8.2 அடி உயரம் கொண்டவர். தமக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை என்றும் திருமணத்திற்குப் பெண் கொடுக்க பலர் மறுத்துவிட்டதாகவும் கூறுகிறார். இதையடுத்து மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் தமக்கு உதவி செய்யக்கோரி தர்மேந்திர பிரதாப் மனு அளித்துள்ளார்.
விளை நிலத்தில் சிக்கிய புதையல்
ஹைதராபாத்: தெலுங்கானாவில் உள்ள பெம்பார்த்தி கிராமத்தில் 11 ஏக்கர் விளை நிலத்தைச் சமன்படுத்தும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது தங்கப்புதையல் ஒன்று கிடைத்துள்ளது. பழைய செம்புப் பானை ஒன்றில் காதணிகள், மூக்குத்தி, கொலுசு உள்ளிட்ட தங்க ஆபரணங்கள் இருந்தன. மொத்தம் 1.727 கிலோ தங்கம், 187.54 கிராம் வெள்ளிப் பொருள்கள் அடங்கிய அந்தப் புதையல் உள்ளூர் கோவிலுக்குச் சொந்தமானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இதையடுத்து அந்தப் புதையல் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டவர்கள் விவாகரத்து செய்தால் 'ஓசிஐ' அட்டை பறிபோகும்
புதுடெல்லி: இந்திய குடிமக்களைத் திருமணம் செய்துவிட்டு விவாகரத்து செய்தால் 'ஓசிஐ' எனும் வெளிநாட்டு வாழ் இந்திய குடிமக்களுக்குரிய அட்டையை வெளிநாட்டவர் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அண்மையில் பெல்ஜியம் நாட்டுப் பெண்மணியிடம் இவ்வாறு செய்யும்படி கேட்டுக் கொண்டதாக அந்த அமைச்சு கூறியுள்ளது. அப்பெண்மணி இந்த உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

