தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்: ஹரியானா நெடுஞ்சாலை அடைபட்டதால் பெரும் பாதிப்பு; பேச வரும்படி மீண்டும் அழைப்பு

தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்: ஹரியானா நெடுஞ்சாலை அடைபட்டதால் பெரும் பாதிப்பு; பேச வரும்படி மீண்டும் அழைப்பு

2 mins read
b085fc49-6db8-4bbd-adef-6212af5e20b6
-

சண்­டி­கர்: இந்திய அர­சாங்­கம், தான் நிறைவேற்றிய புதிய மூன்று வேளாண் சட்­டங்­களை மீட்­டுக்­கொள்ள வேண்­டும் என்று வலி­யுறுத்தி புது­டெல்­லி­யில் பல்­லா­யிரக்­ க­ணக்­கான விவ­சா­யி­கள் நான்கு மாதங்­க­ளுக்­கும் மேலாக போராடி வரு­கி­றார்­கள்.

மத்­திய அர­சாங்­கம் இது­வ­ரை­யில் அவர்­க­ளின் கோரிக்­கைக்­குச் செவி­சாய்க்­க­வில்லை என்­ப­தால் போராட்­டத்தை விவ­சா­யி­கள் தீவிரப்­ப­டுத்தி வரு­கின்­ற­னர்.

இதன் ஒரு பகு­தி­யாக புது­டெல்லி­யிலிருந்து ஹரி­யா­னா­வுக்குச் செல்­லும் விரை­வுச்சாலை­யில் சனிக்­கி­ழமை விவ­சா­யி­கள் நடத்­திய மாபெ­ரும் மறி­ய­லால் போக்­கு­வ­ரத்து பாதிக்­கப்­பட்டு பய­ணி­கள் பெரும் சங்­க­டங்­க­ளுக்கு ஆளா­னார்­கள்.

136 கி.மீ. நீள­முள்ள அந்த ஆறு வழி விரை­வுச்­சா­லை­யில் புது­டெல்லி­யில் இருந்து அன்­றா­டம் 50,000க்கும் மேற்­பட்ட வாக­னங்­கள் திருப்­பி­விடப்­ப­டு­கின்­றன.

அந்­தச் சாலை­யின் குறுக்கே டிராக்­டர், வாக­னங்­களை நிறுத்தி விவ­சா­யி­கள் மறி­ய­லில் ஈடு­பட்­ட­தால் போக்­கு­வ­ரத்து தடைபட்டது.

நேற்­றுக் காலை 8 மணி வரை மறி­யல் தொடரும் என்று அறி­விக்­கப்­பட்­ட­தால் பய­ணி­க­ளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்­பட்­ட­தா­க­வும் அந்த நெடுஞ்­சா­லை­யைத் தவிர்த்­துக்­கொள்­ளும்­படி போலி­சார் ஆலோ­சனை கூறி­ய­தா­க­வும் தக­வல்­கள் தெரி­வித்­தன.

இவ்­வே­ளை­யில், விவ­சா­யி­களின் போராட்­டம் தீவி­ர­ம­டை­வதைக் கருத்­தில்கொண்டு அவர்­களைப் பேச்­சு­வார்த்­தைக்கு வரும்­படி மத்­திய வேளாண் துறை அமைச்­சர் நரேந்­திர சிங் தோமர் மீண்­டும் அழைப்பு விடுத்­தார்.

எல்லா பிரச்­சி­னை­க­ளுக்­கும் பேசி தீர்வு காண மத்­திய அரசு தயா­ராக இருப்­ப­தாக அவர் கூறி­னார். இருந்­தா­லும் இந்­திய நாடா­ளு­மன்­றம் சென்ற ஆண்டு நிறை­வேற்­றிய மூன்று வேளாண் மசோ­தாக்­களால் எந்­த­வித பாதிப்­பும் இல்லை என்று அவர் கூறி­னார்.

''பல விவ­சாய சங்­கங்­களும் பொரு­ளி­யல் வல்­லு­நர்­களும் வேளாண் மசோ­தாக்­களை ஆத­ரிக்­கி­றார்­கள். ஆனால் விவ­சா­யி­களில் ஒரு பிரி­வி­னர் அதை எதிர்க்­கி­றார்­கள். அர­சாங்கம் விவ­சா­யி­களு­டன் 11 சுற்று பேச்­சு­வார்த்தை நடத்தி இருக்­கிறது. தொடர்ந்து அவர்­க­ளு­டன் பேச­வும் அது தயா­ராக இருக்­கிறது,'' என்று அமைச்­சர் கூறி­ய­தாக ஏஎன்ஐ செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­தது.