கோல்கத்தா: மேற்கு வங்காள மாநிலம் இதுவரை எத்தனையோ சட்டமன்றத் தேர்தல்களைப் பார்த்திருக்கிறது. ஆனால் இப்போது நடக்கும் ஒரு தேர்தலைப் போல் இரண்டு கட்சிகளுக்கு இடையில் கண்மூடித்தனமான போட்டாபோட்டி இதுவரை இடம்பெற்றதில்லை என்று கவனிப்பாளர்கள் கூறுகிறார்கள்.
அந்த மாநிலத்தில் உள்ள 294 சட்டமன்ற இடங்களுக்கு மார்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரை எட்டு கட்டங்களாக வாக்களிப்பு நடக்கிறது.
இதுவரை நான்கு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்து இருக்கிறது. ஏப்ரல் 17ஆம் தேதி ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது.
நான்காம் கட்ட வாக்குப்பதிவின் போது துப்பாக்கிச் சூடு காரணமாக நான்கு பேர் மாண்ட சம்பவம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது.
அதிக எண்ணிக்கையில் மக்கள் வாக்களிப்பதால் நாளுக்கு நாள் பரபரப்பு கூடி வருகிறது.
மேற்கு வங்காளத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆண்டு வருகிறது. தொடர்ந்து ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முதல்வர் மம்தா பானர்ஜி சக்கர நாற்காலியில் பிரசாரம் செய்தபடி அரும்பாடுபடுகிறார்.
அதேவேளையில், அவரிடமிருந்து ஆட்சியை எப்படியும் பறித்துவிட வேண்டும் என்று பாஜக முழுமூச்சாகக் களத்தில் இறங்கி இருக்கிறது. இப்படி மேற்கு வங்காளத்தில் நீயா, நானா போட்டா போட்டி சூடுகிளப்பி வரும் நிலையில், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நேற்று தனது பிரசார இயக்கத்தை முடுக்கிவிட்டார்.
நாடியா மாவட்டத்தில் இருக்கும் சாந்திபூரில் ஒவ்வொரு வீதியாகச் சென்று அவர் மக்களைச் சந்தித்தார். நேற்று மட்டும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்ள இருந்தார். பல பொதுக்கூட்டங்களில் பேச இருந்தார்.
சாந்திபூரில் மக்களிடம் உரையாற்றிய அமித் ஷா, மேற்கு வங்காளத்தில் பாஜக ஆட்சி வந்ததும் அரசியல் வன்செயல் ஓய்ந்துவிடும் என்று குறிப்பிட்டார்.
அரசியல் வன்செயலுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் முதல்வர் மம்தா பானர்ஜி நடத்தி வரும் அரசியல், மேற்கு வங்காள மாநிலத்தின் கலாசாரத்துக்குப் பொருத்தமான ஒன்று அல்ல என்றும் அமித் ஷா காரசாரமாகப் பேசினார்.
அதேவேளையில், தோல்வி பயத்தில் பாஜக துப்பாக்கிச் சூடு நடத்துவதாகவும் அதற்கு வாக்குகள் மூலம் பதிலடி கொடுக்கப்படும் என்றும் முதல்வர் மம்தா கடுமையாகக் கருத்துரைத்தார்.
சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட மம்தா, "நான் வங்காளப் புலி. நான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட கூச் பெஹாருக்குச் செல்ல அனுமதியில்லை என்கிறார்கள்.
"அதனால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் காணொளி வழியாக அனுதாபம் தெரிவித்தேன்," என்று கூறினார்.
"வாக்களிக்கச் சென்றவர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டனர். இது ஒரு படுகொலை. இந்தச் சதிக்கு உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷாவே பொறுப்பு," என்று செய்தியாளர்களிடம் பேசிய போது மம்தா மிகவும் காட்டமாகத் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட கூச் பெஹாருக்கு அரசியல்வாதிகள் யாரும் செல்லக்கூடாது என்று 72 மணி நேர தடையைத் தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

