வாகனம் விழுந்தது: 12 பேர் பலி
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் இட்டாவா என்ற மாவட்டத்தில் இருக்கும் பர்புரா என்ற போலிஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரு டிரக் வாகனம் கட்டுப்பாட்டை மீறி 35 அடி பள்ளத்தில் விழுந்ததில் அதில் பயணம் செய்த 12 பேர் மாண்டனர். 40 பேர் காயம் அடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
உடி சக்கர்னா என்ற சாலையில் சனிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு நிகழ்ந்த இந்த விபத்து பற்றி அதிகாரிகள் புலன்விசாரணை தொடங்கி இருக்கிறார்கள்.
ஏர் இந்தியா விமானம்
அவசரமாக தரை இறங்கியது
கொச்சி: ரியாத்திலிருந்து 160 பயணிகளுடன் இந்தியாவின் கரிப்பூர் விமான நிலையத்திற்கு பறந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேற்றுக் காலை கேரளாவின் கொச்சி நகரில் அவசரமாகத் தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் வேறு விமானத் தில் பத்திரமாக கரிப்பூருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
நேரடி வரி வசூல் சாதனை
புதுடெல்லி: இந்தியாவில் கொவிட்-19 காரணமாக சென்ற ஆண்டு பொருளியல் முடங்கிவிட்டபோதிலும் கடந்த நிதியாண்டில் நேரடி வரிகள் மூலம் ரூ.945,000 கோடி வருவாய் கிடைத்துளளது.
2020-21ஆம் நிதி ஆண்டுக்கான நிகர நேரடி வரி வசூல் வழக்கத்துக்கு மாறாக அதிகமாக இருந்ததாக மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் பி.சி.மோடி அறிவித்தார். இதில் நிறுவனங்கள் செலுத்திய 457,000 கோடி ரூபாய் வரியும் தனிநபர்கள் வருமான வரியாக செலுத்திய ரூ.471,000 கோடியும் அடங்கும்.
பேருந்தில் சிக்கிய ரூ.3.5 கோடி,
1 கிலோ தங்கம்; விசாரணை
திருமலை: ஆந்திராவின் ஹைதராபாத் நகரில் இருந்து பெங்களூருக்குச் சென்ற சொகுசு பேருந்தில் ரூ.3.5 கோடி பணத்தையும் ஒரு கிலோ தங்க நகைகளையும் போலிசார் கைப்பற்றி சேத்தன் குமார் என்பவரைக் கைது செய்தனர்.
ஆந்திரா-தெலுங்கானா மாநில எல்லையான பஞ்சலிங்க சோதனைச்சாவடி அருகே பேருந்தில் பிடிபட்ட சேத்தன் குமார், தன்னிடம் இருந்த நகையும் பணமும் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக் கல்லூரிக்குச் சொந்தமானது என்று தெரிவித்ததை அடுத்து போலிசார் பல கோணங்களிலும் விசாரணையை நடத்துகிறார்கள்.
பயங்கரவாதிகள் கொலை
ஜம்மு: ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் ஹதிபோரா பகுதியில் நடந்த மோதலில் அடையாளம் தெரியாத இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட தாகவும் இரு தரப்புகளுக்கும் இடையில் நேற்றும் மோதல் தொடர்ந்ததாகவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்..
லடாக்கில் அமைதி இணக்கம்
புதுடெல்லி: இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் உள்ள கிழக்கு லடாக்கில் பதற்றத்தை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் அமைதி நீடிக்க இந்தியாவும் சீனாவும் சம்மதித்துள்ளன.
லடாக் எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா-சீனா இடையே ராணுவ தளபதிகள் அளவில் 11வது சுற்று பேச்சு வெள்ளிக்கிழமை நடந்தது. அது குறித்து இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கை, அமைதி நீடிக்க இந்தியாவும் சீனாவும் சம்மதித்துள்ளதாகக் கூறியது.

