அமராவதி: திருப்பதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
திருப்பதி நாடாளுமன்றத் தொகுதியில் எதிர்வரும் 17ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அங்கு தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பனபாக லட்சுமி களமிறங்கியுள்ளார். அவரை ஆதரித்து கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு நேற்று முன்தினம் மாலை திருப்பதி ரயில் நிலையம் அருகே பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அங்கிருந்து தொடங்கிய ஊர்வலத்திலும் பங்கேற்று அவர் நடந்து சென்றபோது திடீரென சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
இதைக்கண்டு கீழே குனிந்து கல்வீச்சில் இருந்து தப்பித்தார் சந்திரபாபு நாயுடு. பின்னர் தாக்குதலைக் கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அவரை போலிசார் சமாதானப்படுத்தினர். இதையடுத்து அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.