செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
76da26f6-0955-41e7-a12d-81ac6e9b6e95
-

வெளிநாடு வாழ் இந்திய குடிமக்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி: வெளிநாடு வாழ் இந்திய குடிமக்களை இந்திய அரசு இரண்டாம் தர குடிமக்களாக நடத்தக்கூடாது என உச்ச நீதிமன்றத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது. தாய்நாட்டில் வசிக்கும் இந்திய குடிமகன் ஒருவர் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளும் தங்களுக்கும் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என 80க்கும் மேற்பட்ட வெளிநாடு வாழ் இந்திய குடிமக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளனர். தாங்கள் சுதந்திரமான முறையில் கருத்துக்களை வெளியிட விரும்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரூ.50 லட்சம் மோசடி: பிரபல நடிகை காவல்துறையில் புகார்

பெங்களூரு: பிரபல நடிகை நிக்கி கல்ராணியிடம் ஐம்பது லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக தங்கும்விடுதி உரிமையாளர் மீது போலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிக்கி கல்ராணி வலியுறுத்தி உள்ளார். கர்நாடகாவைச் சேர்ந்த நிகில் என்பவரை நம்பி தங்கும்விடுதியில் ஐம்பது லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்ததாக குறிப்பிட்டுள்ள அவர், ஓராண்டுக்குள் அத்தொகையை திருப்பித் தருவதாகவும் இடைப்பட்ட காலத்தில் மாதந்தோறும் ஒரு லட்சம் ரூபாய் தருவதாகவும் நிகில் தமக்கு வாக்குறுதி அளித்திருந்ததாக நிக்கி கல்ராணி தெரிவித்துள்ளார். எனினும் நிகில் தாம் உறுதியளித்தபடி எந்த தொகையையும் கொடுக்கவில்லை என நிக்கி கல்ராணி கூறியுள்ளார்.

பாலியல் தொழிலில் கணவர்: விவாகரத்து கோரும் மனைவி

பெங்களூரு: கொரோனா ஊரடங்கின்போது வேலையை இழந்த 27 வயது ஆடவர் ஒருவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டது, அவரது குடும்ப வாழ்க்கையைச் சிக்கலாக்கி உள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த அந்த ஆடவர் ஊரடங்கின்போது வேலையை இழந்துள்ளார். வேறு எங்கும் பணி கிடைக்காததால் அவர் பாலியல் தொழிலில் ஈடுபட முடிவு செய்தார். கணவரின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதைக் கண்டு சந்தேகமடைந்த மனைவிக்கு, பின்னர் உண்மை தெரிய வந்துள்ளது. கணவரது மடிக்கணினியில் அவர் பல பெண்களுடன் நெருக்கமாக காட்சியளிக்கும் புகைப்படங்களைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார். குடும்பத்தைக் காப்பாற்ற பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கணவர் விளக்கமளிப்பதை ஏற்காத மனைவி, விவாகரத்து கோரியுள்ளார்.

காவல் அதிகாரி சச்சினை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை

மும்பை: துறை ரீதியான விசாரணை இல்லாமலேயே மும்பை காவல்துறை அதிகாரி சச்சின் வேசை பணிநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு அருகே வெடிகுண்டுகளுடன் ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை சச்சினை கைது செய்து விசாரித்து வருகிறது. மேலும் ஒரு கொலை வழக்கிலும் அவருக்குத் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படு கிறது. தேசிய புலனாய்வு முகமை, மகாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்புப் பிரிவு ஆகியோரிடம் இருந்து சச்சின் வேஸ் சம்பந்தப்பட்ட வழக்குகள், விசாரணைகள் குறித்து மகாராஷ்டிர காவல்துறை பல்வேறு தகவல்களைப் பெற்றுள்ளது. அவற்றின் அடிப்படையில் அவரை பணிநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை மாநில காவல்துறை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் தன் மீதான பல குற்றச்சாட்டுகளை சச்சின் வேஸ் தொடர்ந்து மறுத்து வருவதாக கூறப்படுகிறது.