பெங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே குமரி மீனவர்களின் விசைப்படகு மீது வெளிநாட்டு சரக்கு கப்பல் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். இதில் 9 பேர் மூழ்கி மாயமாகியுள்ளனர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள பேபூரில் இருந்து 'ஐ.எஃப்.பி. ரபா' என்ற படகில் 14 மீனவர்கள் கடந்த வாரம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
நேற்று முன்தினம் அதிகாலை 2.30 மணியளவில் கர்நாடக மாநிலம் மங்களூரு கடற்கரையில் இருந்து 43 கடல் மைல் தொலைவுக்கு அப்பால் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது சிங்கப்பூரில் இருந்து வந்த ஐ.பி.எல். என்ற சரக்கு கப்பல், மீனவர்களின் படகு மீது வேகமாக மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் படகு முற்றிலும் சேதமடைந்து நீரில் மூழ்கிய நிலையில், அதில் இருந்த 14 மீனவர்களும் காணாமல் போயினர். இது குறித்து தகவல் அறிந்ததும், மங்களூரு கடலோர பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
கப்பல், படகு மற்றும் ஹெலிகாப்டர் ஆகியவை மூலம் தேடியதில், 3 மீனவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் ஒருவர் பெயர் அலெக்சாண்டர் என்றும் மற்றொருவர் பெயர் மாணிக் தாஸ் என்றும் தெரிய வந்துள்ளது. மூன்றாம் நபரின் அடையாளம் தெரியவில்லை.
மேலும் இரண்டு மீனவர்கள் மீட்கப்பட்டிருக்கும் நிலையில், எஞ்சிய 9 மீனவர்களின் நிலை என்னவானது என தெரியவில்லை. முதல்கட்ட விசாரணையில், படகில் இருந்தவர்களில் 7 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தலா 2 பேர் மேற்கு வங்கம், அசாமைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.