லக்னோ: உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்ட டுவிட்டர் செய்தியில், "முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் சில முக்கிய அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, நான் தனிமைப்படுத்திக்கொண்டேன். தொற்று பரிசோதனையும் செய்துகொண்டேன்," எனத் தெரிவித்தார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் ஆதித்யநாத் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக முதல்வர் அலுவலக அதிகாரி அபிஷேக் கவுசிக் என்பவருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. அதன்பின் படிப்படியாக அனைவருக்கும் தொற்று பரவியது. இந்நிலையில் முதல்வர் ஆதித்யநாத் நேற்று டுவிட்டரில் பதிவிட்ட செய்தியில், "சில அறிகுறிகள் எனக்கு இருந்ததையடுத்து நான் கொவிட்-19 பரிசோதனை செய்துகொண்டேன். அதில் நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. தற்போது நான் என்னைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன்," எனத் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்திலும் கொவிட்-19 இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. அங்கு நேற்று மட்டும் 18,000க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

