செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
b22da7d9-909e-4fda-9ea0-a23d6cf57918
-

தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்பு

புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையராக சுஷில் சந்திரா நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார்.

சுனில் அரோராவின் பதவிக் காலம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. தேர்தல் ஆணையத்தின் 24வது தலைமை ஆணையராகப் பதவியேற்றுக்கொண்ட சுஷில் சந்திரா, 14.5.2022 வரை பதவி வகிப்பார். இதன் மூலம் கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் சுஷில் சந்திரா தலைமையில் நடைபெறுவது உறுதியாகி உள்ளது.

பிரதமர் மோடி: அம்பேத்கருக்கு தலைவணங்குகிறேன்

புதுடெல்லி: சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரும் இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் நேற்று இந்தியா முழுதும் கொண்டாடப்பட்டது. அம்பேத்கர் பிறந்த நாள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், "சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய அம்பேத்கரின் போராட்டம் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் முன்மாதிரியாக இருக்கும் அம்பேத்கருக்குத் தலைவணங்குகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவின் தடுப்பூசிக்கு அனுமதி

புதுடெல்லி: ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்குப் பயன்படுத்த மத்திய அரசு மருந்துப் பொருட்கள் கட்டுப்பாட்டு அதிகாரி நேற்று அனுமதி வழங்கியுள்ளார்.

இந்தியாவில் 'கோவிஷீல்டு' மற்றும் 'கோவேக்ஸின்' ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதில் 'கோவிஷீல்டு' தடுப்பூசியை ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம், ஆஸ்ட்ராசெனகா ஆகியவற்றுடன் இணைந்து இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. 'கோவாக்ஸின்' தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் 'ஸ்புட்னிக் வி' தடுப்பூசிக்கு இந்தியா அனுமதி அளித்துள்ளது.

அகிலேஷ் யாதவுக்கு தொற்று பாதிப்பு

லக்னோ: உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி, வீட்டில் அவர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இத்தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழில் பிரதமர் புத்தாண்டு வாழ்த்து

புதுடெல்லி: பிரதமர் மோடி, உலகத் தமிழக மக்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது, "தமிழகத்து சகோதர, சகோதரிகளுக்கும், உலகம் எங்கும் உள்ள தமிழர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். தமிழ்ப் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும். அனைவரின் வாழ்விலும், ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சியை புத்தாண்டு கொண்டு வர பிரார்த்திக்கிறேன்," என்று அவர் பதிவிட்டுள்ளார்.