புதுடெல்லி: காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக இந்திய, பாகிஸ்தான் உளவுத்துறைகளின் உயர் அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐக்கிய அமீரக சிற்றரசின் ஏற்பாட்டில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா, பாகிஸ்தான் இடையே காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மோதல் நீடித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பல வீரர்கள் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள்தான் இத்தாக்குதலை நடத்தியதாக இந்திய தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதனால் இருதரப்புக்கும் இடையேயான தூதரக உறவுகள், வர்த்தகத் தொடர்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு நீக்கியதற்கு பாகிஸ்தான் கடும் அதிருப்தி தெரிவித்தது. இதனால் இரு தரப்புக்கும் இடையேயான மோதல் போக்கு மேலும் வலுத்திருப்பதாக அனைத்துலக அரசியல் பார்வையாளர்கள் கருதினர்.
இந்நிலையில் இந்தியாவின் 'ரா', பாகிஸ்தானின் 'ஐஎஸ்ஐ' உளவு அமைப்புகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் காஷ்மீர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
ஐக்கிய அமீரக சிற்றரசின் ஏற்பாட்டில் இந்தப் பேச்சுவார்த்தை துபாயில் நடைபெற்றுள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
கடந்த பல மாதங்களாக இந்த இருதரப்பு பேச்சுவார்த்தை மூன்றாம் நாடுகளில் நடைபெற்று வருவதாக பாகிஸ்தானைச் சேர்ந்த பாதுகாப்புத்துறை ஆய்வாளர் ஆயிஷா சித்திக் கூறியுள்ளார்.
"துபாய் தவிர லண்டன், தாய்லாந்தில் பேச்சுவார்த்தை நடந்திருப்பதாகத் தெரிகிறது. கடந்த காலங்களிலும் இதுபோன்ற பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன என்றாலும் நெருக்கடியான காலகட்டங்களிலேயே அதற்கான சாத்தியக்கூறுகள் நிலவின. மேலும் அப்பேச்சுவார்த்தைகள் குறித்து வெளிப்படையாக ஒப்புக்கொள்ளப்படவில்லை," என்கிறார் ஆயிஷா சித்திக்.
எனினும் பேச்சுவார்த்தைக்குப் பிறகும் பல விஷயங்கள் தவறாக நடக்கும் வாய்ப்புள்ளது என்று விவரம் அறிந்த ஒருவர் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக இந்தியா, சீனா இடையே எல்லைப் பிரச்சினை நிலவி வருகிறது. இருதரப்பும் எல்லையில் அண்மையில் மோதிக் கொண்டதில் சில வீரர்களை இழந்துள்ளன.
இத்தகைய சூழலில் மற்றொரு எல்லைப் பகுதியில் பாகிஸ்தானுடனான மோதலை வலுப்படுத்த இந்தியா விரும்பாது என பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதே போல் கடும் பொருளியல் நெருக்கடியில் சிக்கியுள்ளதால் பாகிஸ்தானும் எல்லைப் பதற்றத்தைக் குறைத்து, பொருளியல் மேம்பாட்டு நடவடிக்கைகளில் முனைப்பு காட்டவே விரும்பும் என்றும் அந்நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும் ஆப்கானிஸ்தானில் இருந்து வீரர்களை மீட்டுக்கொள்ளும் அமெரிக்காவின் முடிவும் பாகிஸ்தானுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றும் ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் தன்னை வலுப்படுத்திக்கொள்ளவே பாகிஸ்தான் முன்னுரிமை அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.
"இத்தகைய சூழலில் இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்தாமல் இருப்பது எந்தப் பலனையும் அளிக்காது. இருதரப்பும் இதை உணர்ந்திருக்கும்.
"மேலும் எந்தவித விளம்பரமும் இல்லாமல் நடத்தப்படும் பேச்சுவார்த்தை அதிக பலன் கொடுக்கும்," என்கிறார் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையின் முன்னாள் செய்தியாளரான மைரா மெக் டொனால்ட்.
ஜனவரி மாதம் நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து எல்லை தாண்டி நடத்தப்படும் துப்பாக்கிச்சூட்டை நிறுத்துவதற்கு இருதரப்பும் முன்வந்துள்ளதாகவும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதிகளில் தேர்தலை நடத்த இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

