கோல்கத்தா: மத்தியில் ஆளும் பாஜக, மதம், சாதி, மொழிகளின் அடிப்படையில் நாட்டு மக்களைப் பிரிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
வெறுப்பு, வன்முறை, பிரித்தாளும் அரசியல் ஆகியவற்றைத் தவிர பாஜகவால் நாட்டு மக்களுக்கு வேறு எதையும் தர இயலாது என்று தேர்தல் பிரசாரத்தின்போது அவர் குறிப்பிட்டார்.
மேற்கு வங்க மாநிலத்தில் எட்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. முதல் நான்கு கட்ட தேர்தல்கள் நடந்தபோது ராகுல் காந்தி பிரசாரத்தில் ஈடுபடவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் உத்தர் தினஜ்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.
அப்போது 'பொன்னான மேற்கு வங்கம்' என்று பாஜக முன்வைக்கும் முழக்கம் வெறும் கானல் நீரைப் போன்றது என ராகுல் விமர்சித்தார்.
"இதற்கு முன்பு திரிணாமுல் காங்கிரசுக்கு வாய்ப்பளித்தீர்கள். ஆனால் அக்கட்சி தோற்றுவிட்டது.
"நாங்கள் ஒருபோதும் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புடன் கூட்டணி வைப்பதில்லை. அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல் சித்தாந்த ரீதியாகவும் போராடி வருகிறோம்," என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
இதற்கிடையே மேற்கு வங்கத்தில் கொரோனா தொற்று பரவ பாஜகவினர் தான் காரணம் என்று முதல்வர் மம்தா சாடியுள்ளார்.
கிருமித்தொற்றை மேற்கு வங்கத்தில் பரப்பிய பின்னர் பாஜகவினர் அங்கிருந்து ஓட்டம் பிடித்துவிட்டனர் என்றும் அவர் பிரசாரத்தின்போது குறிப்பிட்டார்.
முதல்வர் மம்தாவின் இந்தக் குற்றச்சாட்டு தமக்கு பெரும் அதிர்ச்சி அளிப்பதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் நாளை ஐந்தாம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது.

