7வது நாளாக நீடித்த போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தால் பாதிப்பு
பெங்களூரு: அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக கர்நாடகாவில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆறாவது ஊதிய குழு பரிந்துரையின்படி ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் அரசு ஊழியர்களாக தங்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7ஆம் தேதி முதல் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 120,000 ஊழியர்கள் போராட்டத்தில் குதித்ததால் சுமார் 30 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்றும் அரசுக்கு 15 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்
புதுடெல்லி: முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஜி.வி.ஜி.கிருஷ்ணமூர்த்தி முதிர்வின் காரணமாக நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 86. கடந்த 1993ஆம் ஆண்டு அவர் மத்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். பணிக்காலத்தில் சிறப்பாகச் செயல்பட்டதாக பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்ட அவர், பணி ஓய்வு பெற்ற பின்னர் டெல்லியில் வசித்து வந்தார். இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக அவர் காலமானதாக குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
நெருக்கடிக்கு இந்தியா பணியாது: பிரகாஷ் ஜவடேகர் திட்டவட்டம்
புதுடெல்லி: பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தப்படி, காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நடவடிக்கைகளைத் தீவிரமாக செயல்படுத்தி வரும் ஒரே நாடு இந்தியா தான் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பருவ நிலை மாற்ற இலக்கை எட்டுவது தொடர்பான நடவடிக்கைகளில் இந்தியா எந்தவித நெருக்கடிக்கும் அடிபணியாது என திட்டவட்டமாகக் குறிப்பிட்டார். நுாறு ஆண்டுகளுக்கு முந்தைய செயல்பாடுகளால், இப்போது உலகம் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது என்றும் கடந்த முப்பது ஆண்டுகளில், அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வெளியிட்ட மாசுபாடு காரணமாக ஒட்டுமொத்த உலகமும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
லஞ்ச குற்றச்சாட்டு: அனில் தேஷ்முக்கிடம் சிபிஐ விசாரணை
மும்பை: லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். சுமார் எட்டு மணி நேரம் நீடித்த விசாரணையின்போது, தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்ததாகக் கூறப்படுகிறது. மும்பையில் உள்ள மதுபான, கேளிக்கை விடுதிகளில் இருந்து மாதந்தோறும் நூறு கோடி ரூபாய் தொகையை லஞ்சமாக வசூலித்துத் தர வேண்டும் என காவல்துறை ஆணையராக இருந்த பரம்பீர் சிங்கிற்கு அனில் தேஷ்முக் உத்தரவிட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு பரம்பீர் சிங் கடிதம் எழுதியதை அடுத்து அனில் தேஷ்முக் பதவி விலக நேர்ந்தது.
100 கிராமங்களில் மின்னிலக்க விவசாயத்தை ஊக்குவிக்க முடிவு
புதுடெல்லி: மின்னிலக்க விவசாய முறையைப் பரவலாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இதற்காக நாடு முழுவதும் நூறு கிராமங்கள் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பம், முக்கிய தரவுகள், செயற்கை அறிவு ஆகியவற்றைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மூலம் விவசாயிகளுக்கு அடிப்படைச் செலவுகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவசாய நடவடிக்கைகள் எளிதாகும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆந்திரா, உத்தரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நூறு கிராமங்கள் இத்திட்டத்துக்காக தேர்வாகி உள்ளன.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தீயில் கருகி பலி
அமராவதி: அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயரச்சம்பவம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நிகழ்ந்துள்ளது. நேற்று முன்தினம் பங்காரு நாயுடு (50 வயது), அவரது மனைவி நிர்மலா (44 வயது) ஆகிய இருவரும் தங்களது 21, 19 வயது மகன்களுடன் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர். எதிர்பாராத தீ விபத்தால் நால்வரும் உயிரிழந்தனரா அல்லது ஏதேனும் சதிச்செயல் நிகழ்ந்துள்ளதா என போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பங்காரு நாயுடு ஆறு மாதங்களுக்கு முன்புதான் விசாகப்பட்டினத்தில் தமது குடும்பத்தாருடன் குடியேறி உள்ளார்.

