கரப்பான் பூச்சிகள் மீது தமது மனைவிக்கு இருக்கும் அச்சம் காரணமாக திருமணமாகி மூன்றே ஆண்டுகளில் 18 முறை வீடு மாறும் நிலைக்கு ஆடவர் ஒருவர் தள்ளப்பட்டுள்ளார்.
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம், போப்பால் நகரில் அவர் வசித்து வருகிறார். அனாவசியமாக அடிக்கடி வீடு மாற வேண்டியிருப்பதைக் காரணம் காட்டி தற்போது அந்த ஆடவர் மனைவியிடமிருந்து விவாகரத்து கோருகிறார்.
மனைவிக்குக் கரப்பான் பூச்சிகள் மீது அதிக பயம் இருப்பது 2017ல் திருமணத்துக்குப் பிறகே அந்த ஆடவருக்குத் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
சமையலறையில் கரப்பான் பூச்சி இருப்பதைக் கண்ட அந்த மாது உதவிக்குக் கூச்சலிட்டதாகச் சொல்லப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களைப் பயமுறுத்தும் அளவுக்கு அவரது அலறல் சத்தம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
கரப்பான் பூச்சி தொல்லை காரணமாக வீடு மாற வேண்டும் என்று அவர் பிடிவாதம் பிடித்ததாகக் கூறப்பட்டது. 2018ஆம் ஆண்டிலிருந்து அத்தம்பதி 18 முறை வீடு மாறியுள்ளதாகக் கூறப்பட்டது.
கரப்பான் பூச்சி பயத்தைப் போக்கும் நோக்கத்தில் மருத்துவச் சிகிச்சை நாடும்படி மனைவியிடம் கூறியதாக அந்த ஆடவர் சொன்னார். எனினும், கொடுக்கப்பட்ட மருந்தை உட்கொள்ள மனைவி மறுத்துவிட்டதாக அவர் குறைகூறினார்.
மருத்துவச் சிகிச்சை அளிப்பதன் மூலம் தம்மை மனநலம் பாதிக்கப்பட்டவர் என அறிவிக்க தமது கணவர் முற்படுவதாக மனைவி கூறினார்.
இருவருக்கும் ஆலோசனைச் சேவை பலன் அளிக்கவில்லை என்பதால் வேறுவழியின்றி விவாகரத்து பெறுவதில் கணவர் உறுதியாக இருக்கிறார்.

