புதுடெல்லி: இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனை கேரள போலிசார் ஆதாரமற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1994ஆம் ஆண்டு இஸ்ரோவில் பணியாற்றியபோது ராக்கெட் வடிவமைப்பு தொடர்பான ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் விஞ்ஞானி நம்பி நாராயணன் கேரள போலிசாரால் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து ஐம்பது நாள்கள் சிறையில் அடைக்கப்பட்ட அவர், பின்னர் சிபிஐ விசாரணையின் மூலம் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு விடுதலையானார்.
விசாரணையின் போது தாம் போலிசாரால் சித்ரவதை செய்யப்பட்டதாக கூறிய நம்பி நாராயணன், தம்மைக் கைது செய்த மூன்று போலிஸ் அதிகாரிகள் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கில் அவருக்கு கேரள அரசு ஐம்பது லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
மேலும் மூன்று கேரள காவல்துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக மூன்று மாதங்களில் விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும் என சிபிஐ இயக்குநருக்கு உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது.

