ரஷ்யாவின் 'ஸ்புட்னிக்' தடுப்பூசியை வாங்குவதற்கான நடவடிக்கைகள் தொடக்கம்
புதுடெல்லி: ரஷ்யாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசியை இந்தியா இறக்குமதி செய்ய உள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. பல உலக நாடுகளுக்கு இந்தியா இலவசமாகவும் தடுப்பூசிகளை வழங்கி வந்தது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்று மீண்டும் அதிகரிக்கத் துவங்கி உள்ளது. மேலும் தடுப்பூசிப் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பல மாநிலங்கள் போதுமான அளவுக்கு தடுப்பூசி கையிருப்பில் இல்லை எனத் தெரிவித்துள்ளன.
இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய இந்திய அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக ரஷ்ய தயாரிப்பான 'ஸ்புட்னிக் வி' தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்துக்குள் அத்தடுப்பூசிகள் இந்தியாவுக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'ஸ்புட்னிக்' தடுப்பூசி 91.6 விழுக்காடு அளவுக்கு கொரோனா கிருமித்தொற்றைத் தடுக்கும் வலிமை கொண்டது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு 'ஸ்புட்னிக்' தடுப்பூசியின் விலையை ரூ.225ஆக நிர்ணயிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக இந்தியாவில் அத்தடுப்பூசியைத் தயாரிக்க உள்ள ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் ஆண்டுக்கு 850 மில்லியன் தடுப்பூசிகளைத் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
இந்தியாவில் இதுவரை சுமார் 110 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதி
புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்கள் அலுவலகம் வராமல் வீட்டில் இருந்தபடி பணிபுரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், அனைத்துத் துறைகளையும் சார்ந்த அதிகாரிகள் குறித்த நேரத்துக்கு அலுவலகம் வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருமித்தொற்றுப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அனைத்துத் துறைகளின் செயலாளர்களும் அதற்கும் மேற்பட்ட பொறுப்புகளில் இருப்பவர்களும் குறிப்பிட்ட நேர இடைவேளைகளில் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து ஊழியர்களும் ஒரே சமயத்தில் அலுவலகத்துக்கு வருவதையும் அலுவலக வளாகத்தில் உள்ள படிகளில் ஏறி இறங்குவதையும் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பொதுப் பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்களில் 50 விழுக்காட்டினர் மட்டும் அலுவலகத்துக்கு வந்தால் போதும் என்றும் மற்றவர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என்றும் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

