போபால்: மத்தியப்பிரதேச மாநிலம் விதிஷாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோரேலால் கோரி என்பவர் கடந்த 12ஆம் தேதி அனு
மதிக்கப்பட்டார். அவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. மறுநாள் அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனையில் இருந்து தெரிவிக்கப்பட்டதாக அவரது மகன் கைலாஷ் கோரி கூறினார். சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழக்கவில்லை என்று தகவல் வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
"பிறகு அன்று மாலையில் மருத்துவமனையிலிருந்து மீண்டும் ஒருமுறை தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் எனது தந்தை கவலைக்கிடமாக இருப்பதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொன்னார்கள்.
"பின்னர் இரவு 8.30 மணியளவில் அறுவை சிகிச்சை செய்யும் போதே அவர் இறந்துவிட்டதாகவும் கொரோனா நோயாளி என்பதால் உடலை ஒப்படைக்க முடியாது என்றும் கூறிய மருத்துவமனை ஊழியர்கள் வெள்ளிக்கிழமை காலை மயானத்துக்கு வரும்படி தெரிவித்தனர்.
"நாங்கள் மயானம் சென்றபோது வேறு ஒரு குடும்பத்தினர் அங்கு இறுதிச்சடங்குகள் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள் எனது தந்தை உயிரோடு கவலைக்கிடமான நிலையில் இருப்ப தாகக் கூறினர்," என்றார் கைலாஷ்.
இது குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் சுனில் நந்தேஷ்வர் கூறுகையில், கோரேலாலின் இதயத் துடிப்பு சற்று நேரம் நின்றதால் அங்கிருந்த தாதி அவசரப்பட்டு தகவல் கொடுத்ததாகவும் அவருக்கு சிகிச்சை தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

