இந்தியா: கிருமித்தொற்று இருமடங்காகியது

இந்தியா: கிருமித்தொற்று இருமடங்காகியது

3 mins read
22e17ecb-e0f9-48b1-9afa-db24da28e613
-

இந்தியாவில் கொவிட்-19 கிருமி தொற்றியோரின் விகிதாச்சாரம் கடந்த 12 நாட்களில் இரண்டு மடங்காகி 16.69 விழுக்காட்டை எட்டிவிட்டது என்று அரசாங்கம் அறிவித்து இருக்கிறது.

இந்த நிலையில், மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை என்றும் ஆக்சிஜன் அறவே போதவில்லை என்றும் உடனடியாக உதவும்படியும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அபயக்குரல் எழுப்பி மத்திய அரசுக்கு அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுடெல்லி நிலவரம் மிகவும் மோசமடைந்துவிட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். புதிதாக 24 மணி நேரத்தில் அங்கு 24,345 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தொற்று விகிதம் டெல்லியில் 24.56 விழுக்காடாக இருக்கிறது என்றும் அவர் அபாயச்சங்கு ஊதி இருக்கிறார். புதுடெல்லியில் உள்ள அரசுமருத்துவமனைகளில் இருக்கும் 10,000 படுக்கைகளில் 7,000 படுக்கைகளை கொவிட்-19 நோயாளிகளுக்கு ஒதுக்கும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனிடையே, சத்தீஸ்கர் மாநி லத்தின் ராய்ப்பூர் நகரில் செயல் படும் கொவிட்-19 மருத்துவமனை ஒன்றில் திடீரென தீ விபத்து நிகழ்ந்ததில் ஐந்து நோயாளிகள் மாண்டுவிட்டதாகவும் புலன்விசாரணை நடத்த உடனடியாக உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் அம் மாநில போலிஸ் அறிவித்தது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை, முதல் அலை யைவிட மோசமாக இருக்கிறது என்று அதிகாரிகளும் வல்லுநர்களும் அபாயச்சங்கு ஊதி வரு கிறார்கள். சென்ற ஆண்டைப் போல் அல்லாமல் இப்போது இளைஞர்களும் சிறார்களும் அதிகம் பாதிக்கப்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 2.61 லட்சம் பேருக்குப் புதிதாக கிருமி தொற்றிவிட்டது என்று இன்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

24 மணி நேரத்தில் 1,501 பேர் மாண்டுவிட்டார்கள். கொரோனா கிருமி காரணமாக இந்தியாவில் மொத்தம் 177,150 பேர் பலியாகி இருக்கிறார்கள். சனிக்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி நாட்டில் மொத்தம் 122.5 மில்லியன் மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. அவர்களில் 16.1 மில்லியன் பேர் இரண்டாவது தடவையாக அந்த ஊசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.

சென்ற ஆண்டில் கொவிட்-19 முதல் அலை கடுமையாக இருந்த ஜூன் மாதத்தில் 100 பேருக்கு 5.5 பேர் என்ற அளவில் மட்டுமே தொற்று இருந்தது. ஆனால் இப்போது இந்த விகிதாச்சாரம் சரா சரியாக 7.6% ஆக அதிகரித்து இருக்கிறது என்று சுகாதார அமைச்சு இன்று தெரிவித்தது.

நாட்டில் கொவிட்-19 காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14.8 மில்லியனைக் கடந்துவிட்டது. 12.8 மில்லியன் பேர் அந்தத் தொற்றில் இருந்து முற்றிலும் குணமடைந்து இருக்கிறார்கள்.

இந்தியாவில் கடந்த 39 நாட்களாக தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கிருமித்தொற்றில் இருந்து குணமடைவோரின் விகிதாச்சாரம் 86.6 விழுக்காடாகக் குறைந்து இருக்கிறது.

மகாராஷ்டிரா, டெல்லி, சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம், குஜராத் மாநிலங்களில் மரண எண்ணிக்கை அதிகம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பல யோசனைகள் அடங்கிய கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி இருக்கிறார். தடுப்பூசித் திட்டத்தை விரைவுப்படுத்தும்படி அவர் அதில் கேட்டுக்கொண்டு இருக்கிறார். இதனிடையே, இந்திய மக்களில் ஏறத்தாழ 65 விழுக்காட்டினருக்கு வயது 35க்கும் குறைவு என்பதால் இளையர்கள் கிருமித்தொற்றுக்கு ஆளாகக்கூடிய வாய்ப்பு அதிகம் இருக்கும் என்ற கவலை கூடி வருகிறது.

புதுடெல்லியில் புதிய நோயாளிகளில் ஏறத்தாழ 65 விழுக்காட்டினருக்கு வயது 45க்கும் குறைவு என்று முதல்வர் கெஜ்ரிவால் கூறி இருக்கிறார். இரண்டாவது கொரோனா அலை அடிக்கும் இந்தக் காலத்தில் 12 வயதுக்கு குறைந்த சிறார்கள்கூட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதைக் காண முடிவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். சென்ற ஆண்டு நிலவரம் இப்படி இல்லை என்றும் இரண்டாவது அலை பாதிப்புகள் இன்னும் மோசமாகும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்து இருக்கிறார்கள்.