புதுடில்லி: இந்தியாவிலிருந்து மருந்துப் பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
கடந்த நிதியாண்டில் மருந்து நிறுவனங்களின் ஏற்றுமதி 18 விழுக்காடு அதிகரித்துள்ளது.
கிட்டத்தட்ட 1.83 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முந்தைய நிதியாண்டில், 1.54 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கே ஏற்றுமதி செய்யப்பட்டது.
இது குறித்து மேலும் தகவல் தெரிவித்த இந்திய மருந்துகள் ஏற்றுமதி மற்றும் மேம்பாட்டு மன்றம், அண்மைக்காலமாக மருந்துகள் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த நிதியாண்டில் மார்ச் மாதத்தில் மிக அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அந்த மாதத்தில் மட்டும் 48.5 விழுக்காடு அளவுக்கு அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டது.
உலக மருந்து சந்தைகள் ஒன்று முதல் 2 விழுக்காடு அளவுக்கு வீழ்ச்சி கண்ட சூழ்நிலையில் அவற்றுக்கு மாறாக இந்திய மருந்துகளுக்கானத் தேவை அதிகரித்து உள்ளது.
வரும் ஆண்டுகளில் தடுப்பு ஊசி ஏற்றுமதி காரணமாக இந்தியாவில் நல்ல வளர்ச்சி காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கச்சலுகை திட்டம் காரணமாகவும் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவிலிருந்து வட அமெரிக்காவுக்கு அதிகளவில் ஏற்றுமதி நடைபெற்றுள்ளது.
இந்த ஏற்றுமதி மட்டும் கிட்டத்தட்ட 34 விழுக்காடு ஆகும் மன்றம் மேலும் தெரிவித்தது.

