செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
d5d7debb-4b4c-407d-b709-fd82fba42e9f
-

தடுப்பூசி மருந்துகள் திருட்டு

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் கிருமித்தொற்றால் உயிர் இழக்கும் நிலையில் உள்ள நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் தடுப்பு மருந்தான 'ரெம்டெசிவிர்' மருந்துகள் போபால் அரசு மருத்துவமனையில் இருந்து திருடப்பட்டுள்ளன. 850 முறை போடக்கூடிய 'ரெம்டெசிவிர்' தடுப்பு மருந்துகள் தற்போது காணாமல் போயுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

'ரெம்டெசிவிர்' மருந்து காணாமல் போனதை அடுத்து ஆணையர் கிவைட்டா கியபாட், துணை ஆய்வாளர் ஜெனரல் இர்ஷாத் வாலி உள்ளிட்டோர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே மத்திய அரசு தலையிட்டதால் பல்வேறு மருந்து நிறுவனங்கள் ரெம்டெசிவிரின் விலையை கணிசமாக குறைத்துள்ளன. இத்தகவலை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் எல்.மான்டவியா தனது 'டுவிட்டர்' பதிவில் தெரிவித்திருந்தார்.

கடிலா ஹெல்த்கேர் நிறுவனம், 'ரெம்டெசிவிர்' மருந்தின் விலையை ரூ.2,800லிருந்து ரூ.899ஆக குறைத்துள்ளது.

புதுடெல்லி: டெல்லி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என். படேலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறியற்ற கொரோனா பாதிப்பு அவருக்கு இருப்பதாகவும் தற்போது வீட்டில் அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாரத்தின் தொடக்கத்தில் உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த மூன்று நீதிபதிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவா்களுக்கு லேசான அறிகுறிகள் இருந்த நிலையில் அவா்களும் தற்போது வீட்டில் தனிமையில் உள்ளனர்.

கும்பமேளா நிறுத்தம்

புதுடெல்லி: கும்பமேளாவுக்கு வந்த 2.35 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 2,171 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. ஏராளமான துறவிகள் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர். இதையடுத்து சாதுக்கள் அமைப்புகள் சம்மதித்தால் கும்பமேளாவை உடனடியாக நிறைவு செய்யத் தயாராக இருப்பதாக உத்தரகாண்ட் அரசு அறிவித்தது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடியும் கும்பமேளாவில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இந்த நிலையில் கும்பமேளா பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. சாதுக்களின் கூட்டமைப்பின் சுவாமி ஆவ்தேஷ்னந்தகிரி விடுத்துள்ள அறிக்கையில், "பிரதமர் மோடி என்னிடம் பேசினார். அவரது வார்த்தைக்கு மதிப்பளிக்க வேண்டும். கொரோனா தடுப்பு விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். கொரோனாவில் இருந்து மக்களைக் காப்பாற்றுவதுதான் இப்போது முக்கியமான பணி. இதனால் கும்பமேளாவை உடனடியாக நிறைவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது," என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கும்பமேளாவில் இருந்து திரும்பி வரும் சாதுக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய பல்வேறு மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.