தொற்றுப் பரவலைத் தடுக்க ஐந்து அம்ச வழிமுறைகள்: மோடிக்கு மன்மோகன் கடிதம்
புதுடெல்லி: கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைத் தங்கவைத்து சிகிச்சை அளிக்க நான்காயிரம் ரயில் பெட்டிகள் தயார்நிலையில் உள்ளன.
நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான படுக்கைகள் இல்லை. எனவே ரயில் பெட்டிகள் கொரோனா சிகிச்சை அளிக்கும் வார்டுகளாக மாற்றப்படுகின்றன.
மொத்தம் 4,002 ரயில் பெட்டிகள் கொரோனா சிகிச்சை அளிப்பதற்கு ஏற்ப தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது என 'தினத்தந்தி' நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
16 ரயில்வே மண்டலங்களில் இப்பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் மாநில அரசுகளின் தேவைக்கேற்ப அவை வழங்கப்படும் என்றும் ரயில்வே துறை கூறியுள்ளது.
"இந்த நடவடிக்கையால் தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளைதனிமைப்படுத்தி வைக்கும் வசதிகள் அதிகரிக்கும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
கிருமித்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஐந்து அம்ச வழிமுறைகளைக் குறிப்பிட்டு பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.
உள்நாட்டில் தடுப்பூசி உற்பத்தி குறைவாக உள்ளதால், ஐரோப்பிய அல்லது அமெரிக்க மருத்துவ நிறுவனம் ஒப்புதல் வழங்கிய மருந்துகளை, எந்தத் தடையும் இன்றி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என மன்மோகன் சிங் வலியுறுத்தி உள்ளார்.
கணிக்க முடியாத அவசர நிலையை நாடு எதிர்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், அவசர காலத்தில் இவ்வாறு செய்வதை நிபுணர்கள் ஏற்றுக் கொள்வார்கள் எனக் கூறியுள்ளார்.
இதற்கிடையே மன்மோகன் சிங்கின் கடிதத்துக்கு மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பதிலடி கொடுத்துள்ளார்.
"கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசிகளின் முக்கியத்துவம் குறித்து நீங்கள் நன்கு புரிந்துகொண்டுள்ள நிலையில் உங்கள் கட்சியின் பொறுப்புமிக்க பதவிகளில் இருப்பவர்களும் உங்கள் கட்சியின் ஆட்சி நடைபெறும் மாநிலங்களும் உங்கள் கருத்தைப் பகிர்ந்துகொள்வதாகத் தெரியவில்லை," என்று ஹர்ஷ் வர்தன் குறிப்பிட்டுள்ளார்.
விஞ்ஞானிகளுக்கும் தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கும் நன்றி தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இதுவரை ஒரு வார்த்தைகூட கூறாதது தமக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

