புதுடெல்லி: கொரோனா தொற்றுப் பரவலைக் கண்டு அஞ்சவில்லை என்றும் தங்களது போராட்டம் நீடிக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தங்கள் மீது உண்மையான அக்கறை இருக்கும் பட்சத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் நடத்தி வரும் போராட்டம் 200 நாள்களை எட்டியுள்ளது. டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நிலவும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று சம்யுக்தா கிஷான் மோட்சா என்ற அமைப்பின் தலைவர் தர்ஷன் பால் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் மீது மத்திய அரசு அக்கறை காட்ட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் நாளை புதிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
"கொரோனா கிருமித்தொற்றுப் பரவல் அபாய கட்டத்தை எட்டியுள்ளதை அறிவோம். எனினும் கும்பமேளா, மேற்கு வங்கத் தேர்தல் பிரசாரங்களில் ஆயிரக்கணக்கானோர் கூடுகின்றனர்.
"எனவே போராட்டக் களத்தில் இருந்து விவசாயிகள் வெளியேற வேண்டும் என்று கூறப்படுவதை ஏற்க இயலாது. நாங்கள் அனைத்துவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.
"அதன் பிறகும் எங்கள் மீது தாக்குதல் நடந்தால் அதை எதிர்கொள்ளத் தயார்," என்று மற்றொரு விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளரான சுக்தேவ் சிங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

