ஹாங்காங் சென்ற இந்திய விமானத்தில் 49 பேருக்குத் தொற்று

ஹாங்காங் சென்ற இந்திய விமானத்தில் 49 பேருக்குத் தொற்று

1 mins read
00d00804-f176-44f6-b4e9-61c9b1571009
விஸ்தாரா விமானத்தின் பயணிகளில் குறைந்தது 49 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. படம்: AFP -

இம்மாதம் 4ஆம் தேதி இந்தியத் தலைநகர் புதுடெல்லியிலிருந்து ஹாங்காங் சென்ற விஸ்தாரா விமானத்தின் பயணிகளில் குறைந்தது 49 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஹாங்காங்கில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா நான்காவது அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின், அங்கு நாள்தோறும் ஒருசிலரே கொரோனா பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், இந்திய விமானப் பயணிகளில் இத்தனை பேருக்குக் கிருமித் தொற்று உறுதியாகி இருப்பது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

இதனிடையே, நேற்று முதல் இரண்டு வாரங்களுக்கு இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து விமானங்கள் வர ஹாங்காங் தடை விதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா செல்லவேண்டாம்: அமெரிக்கா அறிவுறுத்தல்

இதனிடையே, தடுப்பூசி போட்டிருந்தாலும் இந்தியா செல்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு, தடுப்பு மையம் பயணிகளை எச்சரித்து இருக்கிறது. அப்படித் தவிர்க்க முடியாத பட்சத்தில், தடுப்பூசியின் எல்லாத் தவணையையும் முடித்த பிறகு இந்தியா செல்லுமாறும் அது அறிவுறுத்தி இருக்கிறது.

இவ்வேளையில், இஸ்ரேலிலும் இந்திய உருமாற்றக் கிருமி தலை காட்டியுள்ளது. அக்கிருமி அங்கு எட்டுப் பேரைத் தொற்றிவிட்டது. ஃபைஸர்-பயோஎன்டெக் தடுப்பூசி அக்கிருமிக்கு எதிராக ஓரளவேனும் செயலாற்றும் என இஸ்ரேல் நம்புகிறது.