புதுடெல்லி: இந்திய, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் இடையே ஐக்கிய அரபு சிற்றரசில் எந்தவித சந்திப்பும் நிகழவில்லை எனத் தெரிய வந்துள்ளதாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மொஹம்மத் குரேஷிக்கும் இடையே அபுதாபியில் பேச்சுவார்த்தை நடக்க இருப்பதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியானது.
இந்நிலையில் அமைச்சர் ஜெய்சங்கர் நாடு திரும்பியுள்ளார். இதே வேளையில் ஐக்கிய அமீரக சிற்றரசின் அமைதிக்கான நடவடிக்கைகளை வரவேற்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
"இந்தியாவுடனான நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு மூன்றாம் தரப்பின் பங்களிப்போடு தீர்வு காண்பதை பாகிஸ்தான் எப்போதுமே ஆதரித்து வந்துள்ளது.
"ஐக்கிய அமீரக சிற்றரசு உட்பட பாகிஸ்தானின் நட்பு நாடுகள் பலவும் இந்தியாவுடனான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
"எனினும் மூன்றாம் தரப்பின் பங்களிப்போடு பேச்சுவார்த்தை நடத்த இந்தியா எப்போதுமே தயங்கி வருகிறது. அதனால் இத்தகையப் பேச்சுவார்த்தைகளை பாகிஸ்தான் வரவேற்கிறது," என்று அபுதாபியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அமைச்சர் குரேஷி தெரிவித்ததாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய தரப்பில் இருந்து எந்தவித அதிகாரபூர்வ விளக்கமும் வெளிவரவில்லை.

