ஒரே நாள் பாதிப்பில் உச்சம்: புதிதாக 19 ஆயிரம் பேருக்கு கிருமித்தொற்று
திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா கிருமித்தொற்றுப் பாதிப்பு அதிகரித்த நிலையில், அங்கு இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை இரவுமுதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், தேவையின்றி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என மாநில அரசு அறிவுறுத்தி உள்ளதாக 'தினத்தந்தி' நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
கேரளாவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் புதிதாக 19,577 பேருக்கு கிருமி தொற்றியது உறுதியானது. கொரோனா கிருமித்தொற்று இந்தியாவில் பரவத் தொடங்கியது முதல் பதிவான மிக அதிகபட்ச அன்றாட பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.
பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1.27 மில்லியன் என்றும் 118,673 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அத்துறையின் அமைச்சரான ஷைலஜாவின் மகன், மருமகளுக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் தம்மை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இது குறித்து தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
கேரளாவில் நேற்று முன்தினம் மேலும் 28 பேர் கிருமித்தொற்றால் பலியாகிவிட்ட நிலையில், உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,978ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 1.14 மில்லியன் பேர் கொவிட்-19 பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அறிக்கையில் மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மே 3ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

