மும்பை: தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தையைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
கடந்த 17ஆம் தேதி மகாராஷ்டிராவில் உள்ள வாங்கனி ரயில் நிலையத்தில் தாயுடன் ரயில் நிலைய தளமேடையில் நடந்து சென்ற ஆறு வயது சிறுவன் கால் இடறி தண்டவாளத்தில் விழுந்துவிட்டான்.
அந்நேரம் மின்சார ரயில் ஒன்று வேகமாக வருவதைக் கண்டு சிறுவனின் தாயார் கடும் அதிர்ச்சி அடைந்தார். சில நொடிகளில் சிறுவன் மீது ரயில் மோதக்கூடிய நிலையில், மயூர் ஷெல்கே என்ற ரயில்வே ஊழியர் மிக வேகமாக ஓடி வந்து தண்டவாளத்தில் விழுந்த சிறுவனைத் தூக்கி தளமேடையில் நிற்க வைத்ததுடன் தானும் விரைவாக தளமேடை மீது ஏறினார். அடுத்த நொடி மின்சார ரயில் அந்த இடத்தைக் கடந்து சென்றது.
உயிரைப் பணயம் வைத்து சிறுவனைக் காற்றிய மயூர் ஷெல்கேவை பல்வேறு தரப்பினரும் பாராட்டி உள்ளனர்.
"சிறுவனின் தாயார் செய்வதறியாமல் பதறித் தவித்ததைக் கண்டதும் உயிரைப் பணயம் வைத்தாவது அந்தக் குழந்தையை மீட்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்," என்று மயூர் ஷெல்கே தெரிவித்துள்ளார்.

