புதுடெல்லி: கொரோனா கிருமித்தொற்று இரண்டாவது அலையாக உருவெடுத்து வந்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு தொலைக்காட்சி வழி நாட்டு மக்களிடையே உரையாற்றிய அவர், எத்தனை சவால்கள் இருந்தாலும் துணிச்சலை ஒரு போதும் இழந்து விட வேண்டாம் என்று குறிப்பிட்டதாக 'தினத்தந்தி' நாளேடு தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் கவனமாக இருந்தால் முழு ஊரடங்கை மீண்டும் அமல்படுத்த வேண்டியது இல்லை என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, நோய் பாதிப்பு பகுதிகளில் மட்டுமே கட்டுப்பாடுகள் அவசியமாகிறது என்றார்.
கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான மிகப்பெரிய போரை நாடு மீண்டும் நடத்தி வருகிறது என்றும் கடந்த சில வாரங்களாக நிலைமை கட்டுக்குள் இருந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலையானது புயல்போல வந்துவிட்டது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
இடம் பெயர்ந்து வந்து வேலை பார்க்கும் தொழிலாளர்கள், இந்த தொற்றுப் பரவலுக்கு மத்தியில் சொந்த மாநிலங்களுக்குப் போகத் தேவையில்லை என்றும் தொற்றால் அவர்களது வேலை பாதிக்காது என்றும் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
"முன்னைவிட நம் மருத்துவர்கள் நிபுணத்துவம் பெற்றிருக்கிறார்கள். இதுவரை இல்லாத வகையில் உயிர்களைக் காப்பாற்றி வருகிறார்கள்," என்று பிரதமர் மோடி தமது உரையில் மேலும் தெரிவித்தார்.

