செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
359f4fef-4a05-46c3-ae04-1dce6ea93e28
-

3,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

கொச்சி: பாகிஸ்தானில் இருந்து படகில் கடத்தி வரப்பட்ட ரூ.3,000 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளை கடலோரக் காவல்படை பறிமுதல் செய்தது. திங்கட்கிழமை இரவு கொச்சி அருகே அரபிக்கடலில் கடலோரக் காவல் படையினர் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த போது இலங்கையைச் சேர்ந்த மீன்பிடி படகு ஒன்றை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர். அப்போது 300 கிலோ போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் சந்தை மதிப்பு மூவாயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கர்நாடக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 2,000 பேர் பணிநீக்கம்

பெங்களூரு: வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் இரண்டாயிரம் பேரை பணிநீக்கம் செய்திருப்பதாக கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. கடந்த 8ஆம் தேதி முதல் இந்த

காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2,941 ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். 114 பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டதாக எழுந்துள்ள புகாரின் பேரில் 112 ஊழியர்கள் கைதாகியுள்ளனர்.

அமைதியாக நடந்த வாக்குப்பதிவு

கௌஹாத்தி: பல்வேறு காரணங்களுக்காக அசாம் மாநிலத்தின் மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள நான்கு வாக்குச்சாவடிகளில் நேற்றுமுன்தினம் அமைதியான முறையில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மறுவாக்குப்பதிவு நடைபெற்றதாகவும் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழவில்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கோழிகள் மீது போலிசில் புகார்

புனே: தாம் வளர்க்கும் கோழிகள் வயிறு முட்ட தீவனத்தைத் தின்ற பிறகும் முட்டையிடவில்லை என புனேவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் போலிசில் புகார் அளித்துள்ளார். கோழித் தீவனத்தை விற்பனை செய்யும் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டபோது சரியான பதில் அளிக்கவில்லை என்றும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.