மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் வலியுறுத்து
புதுடெல்லி: டெல்லியில் கொவிட்-19 தொற்று நோயாளிகளுக்குத் தேவைப்படும் உயிர்வளி உருளைகளுக்கு (ஆக்சிஜன் சிலிண்டர்கள்) கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய அரசை மிகவும் காட்டமாக விமர்சித்துள்ளது டெல்லி உயர் நீதிமன்றம். பிச்சை எடுங்கள் அல்லது திருடுங்கள். எப்பாடுபட்டாவது மக்களின் உயிரைக் காத்திடுங்கள் என மத்திய அரசைக் கண்டித்துள்ளனர் நீதிபதிகள்.
தலைநகர் புதுடெல்லியில் கொவிட்-19 நோயாளிகளைக் காப்பாற்ற உயிர்வளி உருளைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதைச் சமாளிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை மாலையில் அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது.
நீதிபதிகள் விபின் சாங்வி, ரேகா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது. புதன்கிழமை இரவு 10 மணிவரை நீடித்த விசாரணை நேற்றும் தொடர்ந்தது.
புதன்கிழமை நடந்த விவாதத்தின்போது "உயிர்வளிப் பற்றாக்குறையால் மக்கள் உயிரிழப்பதை அனுமதிக்க முடியாது. இதை உணர்வுபூர்வமாக அணுகுங்கள்.
தொழிற்சாலைகளில் இருந்து உயிர்வளிக் கலன்களை மருத்துவத் தேவைக்குத் திருப்பிவிடுமாறு உத்தரவிடுகிறது இந்நீதிமன்றம். மக்கள் உயிருக்கே முன்னுரிமை.
மத்திய அரசுக்கு மக்கள் உயிர் மீது அக்கறையில்லையா? என வினவினர்.
மேலும், மத்திய தொழில்துறை செயலாளர் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, உயிர்வளித் தட்டுப்பாட்டைச் சமாளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்குத் தெரிவித்துள்ளதாகவும் விளக்கினார். அதற்கு நீதிபதிகள், உயிர்வளி தேவை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.
இதைச் சமாளிக்க வேண்டியது மத்திய அரசின் கடமை என்று கண்டிப்புடன் கூறினர்.
அப்போது தலைமை வழக்கறிஞர் கூறுகையில், இன்னும் நேரம் கொடுத்தால் மத்திய அரசின் கருத்தைக் கேட்டுக் கூற முடியும் என்றார்.
அவரின் இந்தப் பதிலால் அதிருப்தியடைந்த நீதிபதிகள், நீங்கள் உங்களுக்குத் தேவையான இனிமையான நேரத்தைப் பொறுமையாக எடுத்துக்கொள்ளுங்கள். மக்கள் இங்கே மடிந்துகொண்டு இருக்கட்டும்.
"இப்படி ஓர் இக்கட்டான நேரத்தில் வேறெங்கெல்லாம் உயிர்வளி இருக்கிறதோ அங்கெல்லாம் போய் பிச்சை எடுங்கள், கடனாகக் கேளுங்கள், இல்லை திருடுங்கள்," என்று காட்டமாகத் தெரிவித்தனர்.
பொறுப்பைத் தட்டிக் கழிப்பதால் மக்களின் உயிர்தான் பறிபோகும் என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

