மும்பை: நாட்டில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிக்க நுரையீரல் பாதிப்பினால் உயிர்வளி (ஆக்ஸிஜன்) தேவை நாளுக்கு நாள் அதிகரிக்க மக்கள் பெரும் உயிர் பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றனர்.
மருத்துவமனைகளில் உயிர்வளி கிடைக்காமல் அதிகமான நோயாளிகள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில்தான் மும்பையில் வசிக்கும் நல்ல உள்ளம் படைத்த, 'ஆக்ஸிஜன் மனிதன்' என்று செல்லமாக அழைக்கப்படும் ஷாநவாஸ் ஷேக், தனது ரூ22 லட்சம் பெறுமான எஸ்.யு.வி. ஆடம்பரக் காரை விற்று உயிர்வளி உருளை (ஆக்சிஜன் சிலிண்டர்) வாங்கி கொரோனா நோயாளிகள் உயிர்பிழைக்க உதவி வருகிறார்.
திரு ஷாநாவாஸ், இதற்காக கட்டுப்பாட்டு அறை ஒன்றை அமைத்து, அங்கு உதவி கோரி வரும் அழைப்புகளுக்கு உதவும் வகையில் உயிர்வளி உருளைகளை விநியோகித்து வருகிறார்.
தனது ஃபோர்ட் எண்டவர் காரை விற்று ஷாநவாஸ் 160 உயிர்வளி உருளைகளை வாங்கியுள்ளார். இதனைத் தேவையுள்ளவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.
கடந்த ஆண்டும் ஏழை மக்களுக்கு உதவியதால் தன்னிடம் தற்போது பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு தன் காரை விற்று சேவை செய்ய முடிவெடுத்ததாக திரு ஷாநவாஸ் கூறினார்.
ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த திரு ஷாநவாஸ், தன் நண்பரின் மனைவி, உயிர்வளி இல்லாமல் ஆட்டோவிலேயே மரணமடைந்தது தன்னை மனம் உடையச் செய்துவிட்டது என்றார். அதன்பின் தான் இதுபோன்ற உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டதாகக் கூறினார்.
அரசாங்கத்தை எதிர்பார்த்துக் காத்திராமல் நல்ல உள்ளம் படைத்த ஷாநவாஸ் போன்ற கருணை உள்ளம் படைத்த மனிதர்கள் தங்களால் இயன்ற உதவியைச் செய்து வருகின்றனர்.
மும்பையில் உயிர்வளி அளித்து உயிர்காக்கும் பணியில் தம்மை அர்ப்பணித்துக்கொண்ட இளையர் ஷாநாவாஸ் போல் டெல்லியில் உயிர்காக்கும் மனிதனாக சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார் அசிம் உசேன் என்கிற இளையர்.
இவர் 'Be Human' என்ற பெயரில் ஒரு தொண்டூழிய அமைப்பை நடத்தி வருகிறார். இங்கு 150க்கு மேற்பட்டோர் அவரது பணியில் உதவி வருகின்றனர்.
இந்த அமைப்பின் மூலம் இலவச உயிர்வளி வங்கி (ஃப்ரீ ஆக்சிஜன் பேங்க்) ஒன்றை அமைத்து கொரோனா நோயாளிகளுக்கு உதவி வருகிறார். இவர் டெல்லியின் தர்யாகஞ்ச் பகுதியில் வசித்து வருகிறார்.

