கோல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மேற்குவங்க சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது.
ஏற்கெனவே ஐந்துகட்டத் தேர்தல் முடிவடைந்த நிலையில் நேற்று 6ஆம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இந்தத் தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப் படைகள் பணியமர்த்தப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் எஞ்சியுள்ள 2 கட்ட வாக்குப்பதிவுகள் முறையே வருகிற 26 மற்றும் 29ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
மே 2ஆம் தேதி தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட ஐந்து மாநிலத்தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
மேற்கு வங்கத்தில் முந்தைய தேர்தல்களைப் போல் இந்தத் தேர்தலிலும் மோதல், துப்பாக்கிச் சூடு என வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. 43 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, விறுவிறுப்பாக நடைபெற்றது. குனியா என்ற இடத்தில் வாக்குச் சாவடிக்கு முன்பு இரு குழுக்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் வானில் சுட்டு அவர்களை அப்புறப்படுத்தினர். அப்போது ஒரு வீட்டில் துப்பாக்கிக் குண்டுகள் பட்டு சேதம் அடைந்ததால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. ராய்க்குஞ் என்ற இடத்தில் வாக்காளர்கள் சிலர் சரியான அடையாள அட்டையை காட்டாததால் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த அவர்கள் தேர்தல் அலுவலர் மீது தாக்குதல் நடத்தினர்.
பர்கானாஸ் மாவட்டத்தில் பல இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்கள் இடையே மோதல் வெடித்தது. கட்வா என்ற இடத்தில் வாக்குச் சாவடி முன்பு உடல்நலம் பாதித்து மயக்கம் அடைந்த பெண் ஒருவருக்கு மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் முதலுதவி அளித்தனர்.

