புதுடெல்லி: மருத்துவமனைகளில் உயிர்வளி பற்றாக்குறையின் காரணமாக நோயாளிகள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். மேலும் அதிகப்படியான உயிரிழப்புகளும் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. அதேபோல் தொற்று பாதிப்பில் இருந்து மக்களைக் காக்க முடியாத வகையில் தடுப்பூசிக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. உயிர்வளி, அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பது, அனைத்து குடிமக்களுக்கும் தடுப்பூசி கிடைப்பது மற்றும் மாநில அரசுகள் அமல்படுத்தும் பொதுமுடக்கம் ஆகிய நான்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக நீதிமன்றம் கருதுகிறது. இந்தப் பிரச்சினைகளைச் சரிசெய்ய 'தேசிய அளவிலான ஒருங்கிணைந்த திட்டம்' ஒன்று அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. அதனால் அதுகுறித்த முழு அறிக்கை கொண்ட திட்டத்துடன் மத்திய அரசு வரவேண்டும் என நீதிமன்றம் அறிவிப்பாணை பிறப்பித்துள்ளது. இதைத்தவிர நாடு முழுவதிலும் உள்ள ஆறு உயர்நீதிமன்றங்களில் உயிர்வளி, படுக்கை வசதி பற்றாக்குறை மற்றும் மருந்துகள் இல்லாமை ஆகியவை குறித்து தனித்தனியாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதில், பொதுப் பிரச்சினையாக இருக்கக்கூடிய இந்த விவகாரத்தில் சில குழப்பங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
எனவே இவற்றை மொத்தமாக நாங்களே விசாரிக்கவிருக்கிறோம் என தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே என்பவரை நியமித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

