ஆசிஷ் யெச்சூரி தொற்றால் மரணம்
புதுடெல்லி: கொரோனா தொற்று பாதிப்பால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் ஆசிஷ் யெச்சூரி (வயது 34) மரணமடைந்தார். இதுதொடர்பாக சீதாராம் யெச்சூரி தனது டுவிட்டர் பக்கத்தில், "கொரோனா தொற்றுக்கு எனது மூத்த மகன் ஆசிஷ் யெச்சூரியை இழந்துவிட்டேன் என்பதை மிகுந்த வேதனையோடு தெரிவித்துக்கொள்கிறேன். "கடினமான நேரத்தில் எங்களுக்கு நம்பிக்கை ஊட்டிய அனைவருக்கும், என் மகனுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," எனத் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி மருந்துகள் திருட்டு
சண்டிகர்: அரியானா மாநிலம் ஜிண்ட் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 1,710 கொரோனா தடுப்பூசி மருந்துகள் குளிர்சாதன சேமிப்பு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. இவை 1,270 கொவிஷீல்டு மற்றும் 440 கோவாக்சின் தடுப்பூசி மருந்துகள் ஆகும். இந்நிலையில், அங்கிருந்து 1,710 தடுப்பூசி மருந்துகள் திருட்டுப் போய்விட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. நேற்று காலை வழக்கமான பணிக்காக வந்த மருத்துவமனைப் பணியாளர், தடுப்பூசி சேமிப்புக் கிடங்கின் கதவு திறக்கப்பட்டு தடுப்பூசிகள் திருடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக, மருத்துவமனை நிர்வாகம் இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தடுப்பூசித் திருடர்களை வலைபோட்டுத் தேடி வருகின்றனர்.
இலவச தடுப்பூசிக்கு கோரிக்கை
திருவனந்தபுரம்: மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் கோவிஷீல்டு தடுப்பு மருந்தின் விலையை அதிகரித்து சீரம் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு பல்வேறு மாநிலங்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுபோன்ற நெருக்கடி காலத்தில் மத்திய அரசுதான் மாநிலங்களுக்கு மருந்துகளை வழங்கவேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசம், அசாம் தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் என அறிவித்துள்ளன. அந்த வரிசையில் இப்போது கேரளாவும் இணைந்துள்ளது. இதேபோல் மத்திய பிரதேசம், பீகார், சட்டீஸ்கர் மாநிலங்களும் தடுப்பூசி இலவசம் என அறிவித்துள்ளன.

