செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
aa65f78b-f317-463c-9885-02844dbad54a
-

'ஆக்சிஜன் பகிர்வில் மத்திய அரசு

தன் கடமையைச் செய்யவேண்டும்'

மும்பை: "ஆக்ஸிஜன் பெற மத்திய அரசின் காலில்கூட விழத் தயாராக இருக்கிறோம். மக்களைக் காப்பாற்ற எதையும் செய்யத்தயாராக இருக்கிறோம். மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். திரவ ஆக்சிஜன் பெற காலைப்பிடிக்கக்கூட தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார் மகாராஷ்டிர மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே. மேலும் அவர், "மாநிலங்களுக்கு ஆக்சிஜனைப் பகிர்ந்துகொடுப்பது மத்திய அரசின் பொறுப்பு. அதைச் சரியான முறையில் செய்யவேண்டும். மத்திய அரசு தனது கடமையைச் செய்யவேண்டும். மகாராஷ்டிராவுக்குக் கூடுதல் அளவு ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். ஆக்சிஜன் டேங்கர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு விரைவாகச் செல்ல சாலையில் தேவையான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்," என்று கூறியுள்ளார் அமைச்சர் ராஜேஷ் தோபே.

'கொரோனா தடுப்பூசி என தெரியாமல் திருடிவிட்டேன்'

சண்டிகார்: இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பூசி, ரெம்டெசிவிர் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, கொரோனா தடுப்பூசி, ரெம்டெசிவிர் மருந்துகள் திருடப்பட்டு கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், நேற்று முன்தினம் அரியானா மாநிலம் ஜிண்ட் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 1,710 கொரோனா தடுப்பூசி மருந்துகள் திருட்டுப் போய்விட்டது.

இந்நிலையில், தான் திருடிய மருந்துகளை அந்தத் திருடனே ஜிண்ட் மாவட்ட காவல் நிலையம் அருகேயுள்ள ஒரு தேநீர்க்கடைக்காரரிடம் நேற்று முன்தினம் மாலை கொடுத்து போலிஸ்காரர்களிடம் கொடுக்கும்படி கூறிவிட்டு, கூடவே கடிதம் ஒன்றையும் கொடுத்துவிட்டு தலைமறைவாகிவிட்டான். அந்தக் கடிதத்தில் "இது கொரோனா தடுப்பூசி மருந்து என்று எனக்குத் தெரியாது. மன்னித்துவிடுங்கள்," என எழுதப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார் முதல்வர் எடியூரப்பா

பெங்களூரு: கடந்த 16ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்நாடக முதல்வர் எடியூரப்பா, 6 நாட்கள் சிகிச்சைக்குப் பின் முழுமையாகக் குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அப்போது அவர், "கர்நாடகாவில் ஒரு வீட்டில் 2 முதல் 3 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் நிலைமை கட்டுப்பாட்டை மீறிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அமைச்சர்களுடன் கலந்துபேசி, மேலும் தீவிரமாகக் கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு எடுக்கப்படும். மக்கள் அனைவரும் கட்டுப்பாட்டை மதித்து அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்," என்று முதல்வர் எடியூரப்பா கேட்டுக்கொண்டார்.

10 நாட்களில் 6 செய்தியாளர்கள் பலி

புதுடெல்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் செய்தியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவாசக்கருவி கிடைக்காமல்

10 நாட்களில் 6 செய்தியாளர்கள் பலியாகி உள்ளனர்.

இந்த ஆறு பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டதும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்குச் சேர்க்கவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இவர்களில் சிலர் தங்கள் சொந்த முயற்சியில் ஆக்ஸிஜன் சிலிண்டர் ஏற்பாடு செய்தும் அதற்கான சுவாசக் கருவி கிடைக்காமல் இறந்துவிட்டனர்.