உத்தரகாண்டில் மீண்டும் பனிச்சரிவு; எட்டுப் பேரின் சடலங்கள் மீட்பு

உத்தரகாண்டில் மீண்டும் பனிச்சரிவு; எட்டுப் பேரின் சடலங்கள் மீட்பு

1 mins read
6e1643d2-8e34-41a7-8289-e194302c95b1
உத்தரகாண்டில் ஏற்கெனவே பனிச்சரிவு விபத்தில் மீட்புப் பணிகள் நடந்து வரும் நிலையில் மீண்டும் பனிப்பாறைகள் உடைந்து விழுந்துள்ளன. படம்: ராய்ட்டர்ஸ் -

இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 23) பிற்பகல் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கியவர்களில் 384 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். பனிச்சரிவில் சிக்கிய எட்டுப் பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

சமோலி மாவட்டத்தில் நீதி வேலியை ஒட்டிய இந்திய, சீன எல்லைப் பகுதியருகே பனிச்சரிவு ஏற்பட்டது. நித்தி பள்ளத்தாக்கில் சும்னா சௌகி என்ற இடத்தைத் தாண்டிய ஓர் இடத்தில் பனிப்பாறைகள் சரிந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விபத்து நிகழ்ந்த பகுதியில் சாலை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள நிலைமை பற்றி உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியவில்லை.

பனிச்சரிவு ஏற்பட்ட இடத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற மீட்புக் குழுவினர் விரைந்து செயல்பட்டு வருகின்றனர். முதல்கட்ட தகவலின்படி, 384 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஆறு பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நள்ளிரவில் மோசமான வானிலை காரணமாக மீட்பு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் இன்று காலை மீண்டும் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.