புதுடெல்லி: கிருமிப் பரவலால் ஒவ்வொரு நாளும் 300,000க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 2,000க்கு மேற்பட்டோர் உயிரிழக்கும் ஆபத்தான நிலையில் இந்தியாவுக்கு உதவ உலக நாடுகள் பல முன்வந்து உள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி என பலவும் இந்தியாவுக்கு உதவத் தயாராக இருப்பதாகக் கூறி உள்ளன. அமெரிக்க சுகாதார அமைச்சர் மாட் ஹான்காக் கூறுகையில், இந்தியாவில் நிகழும் கொவிட்-19 சம்பவங்கள் துயரத்திற்குரியவை. இந்தக் கொடூர கிருமித்தொற்றை எதிர்த்துப் போராடும் இந்தியாவுக்குத் தோள் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்," என்றார்.
வெள்ளை மாளிகை பேச்சாளர் ஜென் சாக்கி கூறுகையில், "கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரும் இந்திய மக்களுக்கு எங்கள் அனுதாபங்கள். இந்த நெருக்கடியான சூழலில் அமெரிக்கா எவ்வாறு உதவலாம் என்பது குறித்து அரசியல் மட்டத்திலும் அதிகாரிகள் மட்டத்திலும் நிபுணத்துவ ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன," என்றார்.
இந்தியாவுக்கு உதவத் தயாராக இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "கொரோனா பெருந்தொற்று பாதிப்பால் மிகக்கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்தியாவுக்கு எந்த வகையில் உதவலாம் என ஆராய்ந்துகொண்டிருக்கிறேன்," என்றார்.
பிரெஞ்சு அதிபா் இமானுவல் மேக்ரனின் செய்தியை இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இமானுவல் லினைன் பகிா்ந்துள்ளார்.
அதில், "இந்தியாவில் கிருமித்தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்த நேரத்தில் இந்திய மக்களுக்கு பிரான்ஸ் உறுதுணையாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன். கொள்ளைநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு உதவ பிரான்ஸ் தயாராக உள்ளது," என்று அவர் கூறினார்.
இதேபோன்ற உறுதியை ஆஸ்திரேலிய, ஜெர்மானிய தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.

