புதுடெல்லி: இந்தியாவில் சென்ற ஆண்டில் கொவிட்-19 தொற்று தலைகாட்டியபோது பல மாநிலங்களிலும் அமைக்கப்பட்ட சிறப்பு கொவிட்-19 நிலையங்கள், 2வது அலை ஏற்படுவதற்கு முன்பாகவே ஒன்றன்பின் ஒன்றாக மூடப்பட்டன.
இந்த நிலையில், இந்தியாவில் 2வது கொவிட்-19 அலை படுமோசமாக மிரட்டுவதால் நாடு முழுவதும் கொரோனா மருத்துவமனைகளை ராணுவ தளவாட நிறுவனங்கள் விரைவாக அமைத்து வருகின்றன.
கர்நாடகாவின் பெங்களூரு, ஒடிசாவின் கோராபுட், மகாராஷ்டிராவின் நாசிக், உத்தரப்பிரதேசத்தின் லக்னோ ஆகிய நகர்களில் அத்தகைய நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அல்லது அமைக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஒடிசா மற்றும் உத்தரகாண்டில் தளவாடங்கள் தொழிற்சாலை வாரியத்திற்குச் சொந்தமான 25 இடங்களில் ஆக்சிஜன், படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையங்களை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் அமைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாரத் டைனமிக்ஸ் நிறுவனம், பிஇஎம்எல் நிறுவனம், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் உள்ளிட்ட ராணுவ பொதுத்துறை நிறுவனங்கள், ஆக்சிஜனை, ஆலைகளில் இருந்து அரசு மருத்துவமனைகளுக்கு அதிகமாக கொள்முதல் செய்கின்றன.
இதனிடையே, 10% தொற்றுகள் தெரியவந்தால் அந்த மாவட்டங்களில் ஊரடங்கு, 50% ஊழியர்களுக்கு மட்டும் அலுவலகங்களில் அனுமதி போன்ற தீவிரமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கும்படி மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இவ்வேளையில், மரணங்கள் அதிகமாக இருந்துவரும் குஜராத் மாநிலத்தில் தீவிரமான கொரோனா நோயாளிகளுக்குப் பயன்படுத்தும் ரெம்டெசிவிர் மருந்து ரகசியமாக கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
இந்தச் சட்டவிரோத காரியம் தொடர்பில் ஒரு மருத்துவர் உட்பட நால்வர் பிடிபட்டுள்ளதாக ஊடகங்கள் குறிப்பிட்டன.
இதனிடையே, ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கொரோனா நோயாளிகள் நால்வர் நேற்று உயிரிழந்ததாக தகவல்கள் கூறின. நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக 93,000 ரயில்வே ஊழியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் பராபங்கி என்ற ஊரில் உள்ள மருத்துவமனை யில் நேற்று பிறந்த இரட்டைக் குழந்தைகள் ஆக்சிஜன் இன்றி மாண்டுவிட்டன. மகாராஷ்டிராவில் யவத்மால் மாவட்டம் அம்டி கிரா மத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் இருந்து 20 நோயாளிகள் தப்பி ஓடிவிட்டதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன.