திருவனந்தபுரம்: மணமகனுக்கு கொவிட்-19 தொற்று இருந்தாலும் பாதுகாப்பு கவச உடை அணிந்து மணமகனை இளம்பெண் மணந்தார்.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த சரத்மோன் என்பவருக்கும் அபிராமி என்ற பெண்ணுக்கும் 2021 ஏப்ரல் 25ஆம் தேதி திருமணம் செய்ய முடிவாகி இருந்தது. மத்திய கிழக்கில் வேலை பார்த்த சரத்மோன் சில நாட்களுக்கு முன் கேரளா திரும்பி தன் வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்துவந்தார்.
இந்நிலையில், சரத்மோனுக்கும் அவரின் தாயாருக்கும் கொவிட்-19 தொற்று இருப்பது உறுதியானது. இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
என்றாலும் சரத்மோன்- அபிராமி திருமணம் குறித்த நாளில் நடக்க வேண்டும் என்று உறவினர்கள் விடுத்த வேண்டுகோளை மாவட்ட நிர்வாகம் ஏற்றது.
கொவிட்-19 வழிகாட்டி நெறிமுறைகளை மீறக்கூடாது என்று எல்லாருக்கும் நிர்வாகம் உத்தரவிட்டது.
இதையடுத்து சரத்மோன் சிகிச்சை பெற்று வரும் ஆலப்புழா மருத்துவமனைக்கு மணமகள் அபிராமி, இருதரப்பு உறவினர்கள் சிலருடன் சென்றார்.
மருத்துவமனையில் அதிகாரிகள், உறவினர்கள் முன்னிலையில், அனைவரும் வாழ்த்த, வழிகாட்டி நெறிமுறைகளை முற்றிலும் பின்பற்றி இருவருக்கும் திருமணம் நடந்ததாக தமிழக செய்தித்தாள் ஒன்று தெரிவித்தது.

