செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
d1473be8-7b20-46ff-b68a-49fdab850b5a
-

மேற்கு வங்காளம் தேர்தல்:

7ஆம் கட்ட வாக்களிப்பு மும்முரம்

கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் எட்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. நேற்று ஏழாம் கட்ட வாக்களிப்பில் மொத்தம் 34 தொகுதிகளில் மக்கள் விருப்பத்துடன் வாக்குச்சாவடிகளில் குவிந்தனர்.

பிற்பகல் 1.30 மணி வாக்கில் 55% வாக்குகள் பதிவாகி இருந்தது. வன்செயலில் ஒருவர் மாண்டதாக ஊடகத் தகவல் தெரிவித்தது.

விவசாயிகள் பேரணி ஒத்திவைப்பு

புதுடெல்லி: மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை நீக்கக் கோரி பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த நவம்பர் மாதம் முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மே மாதம் நாடாளு மன்றத்தை நோக்கி பேரணி நடத்துவதாக அறிவித்து அதற்கான ஆயத்த வேலைகளில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நாட்டில் கொவிட்-19 பரவல் வேகமாக அதிகரித்து வருவதால் அந்தப் பேரணியைத் தற்காலிகமாக தள்ளிவைக்க விவசாய சங்கங்கள் முடிவு செய்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.

வலைத்தளங்களுக்கு உத்தரவு

புதுடெல்லி: இந்தியாவில் செயல்படும் டுவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் கொவிட்-19 தொற்று விதிமுறைகள் பற்றிய வதந்திகள், சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் தகவல்கள், பழைய, தேவையற்ற புகைப்படங்கள், காணொளிகள் போன்ற 100க்கும் மேற்பட்ட பதிவுகளை நீக்கிவிட வேண்டும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சு உத்தரவிட்டு உள்ளது.

தொற்றுக்கு எதிராக ஒட்டுமொத்த நாடே போராடிவரும் நிலையில், சமூக வலைத்தளங்களைச் சிலர் தவறாகப் பயன்படுத்தி மக்களிடம் பீதியை ஏற்படுத்துவதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

ஈரிலக்க வளர்ச்சி சந்தேகம்

புதுடெல்லி: இந்தியாவின் பொருளியல் அதிவேகமாக 12.5% வளர்ச்சி காணும் என்று அனைத்துலக பண நிதியம் இரண்டு வாரங்களுக்கு முன் கணித்து இருந்தது.

இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் பேங் ஆஃப் இந்தியாவும் தனது 10.5% வளர்ச்சிக் கணிப்பை வெளியிட்டு இருந்தது. ஆனால் உலகில், குறிப்பாக இந்தியாவில் 2வது கொவிட்-19 அலை மோசமாகி வருவதால் அந்தக் கணிப்பு பொய்த்துப்போய்விடும் நிலை ஏற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா எங்கும் முடக்கம் நடப்பில் இருப்பதை ஊடகத் தகவல்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றன.

எரிவாயு உற்பத்தி தொடக்கம்

புதுடெல்லி: இந்தியாவின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனமும் வங்காள விரிகுடா கடலில் கேஜி- டிஆர்6 என்ற கடலடி எரிவாயு துரப்பண ஆலையை அமைத்துள்ளன.

அதில் மூன்று ஆழ்கடல் எரிவாயு உற்பத்தி அலகுகளை அவை நிறுவி வருகின்றன. இந்த மூன்றும் சேர்ந்து நாள் ஒன்றுக்கு 1 பில்லியன் கனஅடி இயற்கை வாயுவை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது இந்தியாவின் எரிவாயு தேவையில் 15%ஐ நிறைவேற்றும். இந்நிலையில் இரண்டாவது அலகு உற்பத்தியைத் தொடங்கி இருப்பதாக நேற்று இந்த நிறுவனங்கள் அறிவித்தன.